கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் கேரளா கலாசார முறையில் அத்தப்பூ கோலமிட்டும் திருவாதிரை நடனமாடியும் அரண்மனை ஊழியர்கள் ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
கேரளா மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கழிந்த மாதம் 30-ம் தேதி ஹஷ்த நட்சத்திரத்தில் ஆரம்பித்து வரும் 8-ம் தேதி திருவோண நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்த நிலையில் ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் இருந்ததால் தற்போது கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மலையாள மொழி பேசும் கேரள மக்கள் அதிகமாக வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. அதேப்போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையிலும் இன்று கேரளா கலாசார முறையில் ஓணம் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் அரண்மனை ஊழியர்கள் மன்னர் மகாபலி வேடமணிந்தும், பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டும் ஊஞ்சலாடியும், திருவாதிரை நடனமாடியும் ஓணப்பண்டிகையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மேலும் ஊழியர்களுக்கிடையே கேரள பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலமிடுதல், வடம் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM