கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு, கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து திரையிடப்பட்டது.
வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளினை முன்னிட்டு, சென்னையில் அன்னாரின் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்றும் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று திரையிடப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
“கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திடும் வகையிலும், சுதந்திரப்போராட்டத்திற்காக அவர் செயல்பட்ட வீரத்தையும், மக்கள் பயன்பாட்டிற்காக அற்பணித்த தியாகத்தையும் அனைவரும் அறிந்திடும் வகையில் இத்திரைப்படம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
மேலும், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நாளை நவீன முறையில் திரையிடப்படவுள்ளது. இதற்கு அனுமதி இலவசம்”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.