நாகர்கோவில்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. கடந்த 3 நாட்களாக விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. தென் மண்டல ஐ.ஜி. ஆஸ்ராகர்க் கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
7ம் தேதி மதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர். ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கி வைத்து விட்டு, அன்றைய தினமே முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை புறப்பட்டு செல்கிறார். 7ம் தேதி வரும் ராகுல்காந்தி 10ம் தேதி இரவு வரை குமரி மாவட்டத்தில் தான் உள்ளார். 11ம் தேதி காலையில் தான் அவர் கேரளா செல்கிறார். 4 நாட்கள் ராகுல்காந்தி குமரியில் தான் தங்குகிறார். இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. அவர் பாதயாத்திரை செல்லும் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.
இதற்காக டெல்லியில் இருந்தும் பாதுகாப்பு படை அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்கள் ஐ.ஜி. ஆஸ்ராகர்க்குடன் ஆலோசனை மேற்ெகாண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வருகையையொட்டி கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள லாட்ஜூகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்ஜூகளில் தங்கி இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) தாமரைக்கண்ணன் நாளை குமரி மாவட்டம் வருகிறார்.
அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிடுகிறார். பின்னர் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், ராகுல்காந்தியின் நடைபயணம் செல்லும் வழிப்பாதைகளையும் ஆய்வு செய்கிறார். பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்ெகாள்கிறார்.