‘படிப்பில் என் மகளை முந்துவதா’ – இந்தப் பொறாமை எண்ணத்தால், மகளுடன் படிக்கும் 13 வயது மாணவனுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார் பெண் ஒருவர்.
காரைக்காலை அடுத்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருகிறார்கள் ராஜேந்திரன் – மாலதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண்ணும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் இரண்டாவது மகன் பாலமணிகண்டன் படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியுள்ளான். வீட்டுக்கு அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்திருக்கிறான்.
சம்பவத்தன்று, அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா ஒத்திகை நடந்திருக்கிறது. ஒத்திகையில் கலந்து கொண்ட பாலமணிகண்டனுக்கு, வீட்டிலிருந்து அனுப்பப்பட்டதாக கூல்டிரிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அருந்திய மாணவன் வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அங்கு அவனுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. உடனே, அவனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இதனிடையே, பள்ளிக்கூடத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்ததில், பாலமணிகண்டனுடன் படிக்கும் சிறுமி ஒருவரின் அம்மா, விஷம் கலந்த குளிர்பானத்தைத் திட்டமிட்டு சிறுவனுக்குக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பாலமணிகண்டன் இறந்து விட்டான்.
விசாரணையில், பாலமணிகண்டனுக்கும், கொலை செய்த பெண்ணின் மகளுக்கும் படிப்பிலும் இதர திறன்களிலும் போட்டி இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. பள்ளி ஆண்டு விழாவில் பாலமணிகண்டன் நடனமாடினால் தன் மகளால் நடனப்போட்டியில் ஜெயிக்க முடியாது என்ற காரணத்துக்காக, கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொலை செய்திருக்கிறார் அந்த அம்மா. பொறாமையுணர்வு, ஒரு கொலை செய்கிற அளவுக்குச் செல்லுமா? சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனிடம் கேட்டோம்.
”பொறாமையும் ஓர் உணர்வுதான். அது எல்லோரிடத்திலும் உண்டு. என்றாலும், அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும், கட்டுப்பாட்டை மீறினால் அது தன்னையே அழித்துவிடும் என்ற பகுத்தறிவு இருப்பவர்களும் பொறாமையைச் சரியாகக் கையாளுவார்கள். இந்தப் பெண்ணுக்கு தன்னுடைய பொறாமையை சரியாகக் கையாளத் தெரியவில்லை. உதாரணத்துக்கு, `என் பொண்ணோட கிளாஸ்மேட் என் பொண்ணைவிட நல்லா படிக்கிறான்; அவனாலதான் என் பொண்ணு ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கலை’ என்பதுபோல யாரிடமாவது பகிர்ந்து இருந்தால், `எதுக்கு பொறாமைப்படுறே; உன் பொண்ணையும் நல்லா படிக்கச் சொல்லு’ என்கிற புத்திமதி கிடைத்திருக்கும். `அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு விஷம் கொடுக்கிறதுக்கு பதில் என் பொண்ணை நல்லா படிக்க வைக்கணும்’ என்கிற தெளிவு பிறந்திருக்கும். தன் பொறாமையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்.
சிலர் வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்திருப்பார்கள். சிறுமியின் அம்மாவும் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருக்கலாம். தன்னைப்போலவே தன் பெண்ணும் தோல்வியைச் சந்திக்கக்கூடாது; அதற்குக் காரணமாக இருக்கிற சிறுவனை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் கொலை செய்திருக்கலாம். எல்லாவற்றையும்விட முக்கியமாக, அந்தச் சிறுவனைக் கொன்ற பிறகு தன்னுடைய நிலைமை என்னவாகும்; தான் இல்லாத நிலையில் ஒரு கொலைகாரியின் மகளாக தன்னுடைய மகளின் எதிர்காலம் என்னவாகும் என்கிற பகுத்தறிவு இல்லாததும்தான் ஓர் அப்பாவி சிறுவனின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது” என்று முடித்தார் பிருந்தா ஜெயராமன்.