திருவாரூர்: திருவாரூரில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய முத்தரசன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநருக்குரிய பணியை கவனிக்காமல், பாஜகவிற்கு பிரச்சாரம் செய்வதாக குற்றம்சாட்டினார்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சனாதனத்தின் தீமைகளையும், திராவிடத்தால் நேர்ந்த நன்மைகளையும் விளக்கி பேசினார். வர்ணாசிரம ஆட்சி வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றார். திராவிட இயக்க அரசியலை தூக்கி எறிவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் சனாதன சக்திகளுக்கு எதிராக போராட வேண்டியதின் அவசியத்தை திருமாவளவன் எடுத்துரைத்தார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு மாடல் இருப்பதாக தெரிவித்த கே.பாலகிருஷ்ணன், சிந்தனையாளர்களையும், தேச பக்தர்களையும் கொன்று குவிப்பது தான் பாரதிய ஜனதாவின் மாடலா என கேள்வி எழுப்பினார்.