சென்னை: செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினார். சென்னை துறைமுகம் வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரபோராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையட்டி, சென்னை, இராஜாஜி சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் , சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம்!தற்சார்பு – தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் இன்று காலை 10.00 மணிக்கும், 06.09.2022 அன்று காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக நவீன முறையில் (Digital) திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வ.உ.சி. படத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கோவை மத்திய சிறை வளாகத்தில் வ.உ.சியின் திருவுருவ படத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் மலர்தூவி மரியாதை செய்தனர்.
செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் யார்?
உ. சிதம்பரனாரின் 151வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் வாழ்விலும், தமிழ்ப்பணியிலும் தன்னிகரற்று திகழ்ந்தவர் ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என புகழப்படும் வ.உ.சிதம்பரனார். 1900களில், வெள்ளையர் ஆட்சியை முறியடிக்க அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் என அகிம்சை வழியில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த காலம். சுதந்திர போராட்ட வீரர், மொழி பெயர்ப்பாளர், நுாலாசிரியர், பத்திரிகையாளர் என பல பரிணாமங்களை கொண்டவர் வ.உ.சிதம்பரம் வெள்ளையனை எதிர்த்து தீவிரமாக போராடினார்.
இவர் துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 1872 செப்.5ல் பிறந்தார். சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். பின் 1890களில் பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு, சுதேசி இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். கைத்தறி ஆடைகளுக்காக தர்ம சங்க நெசவுச்சாலையையும், சுதேசி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசி கடைகளையும் துவக்கினார்.
துாத்துக்குடி– கொழும்பு போக்குவரத்தில் ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் ஏகபோக உரிமையை அனுபவித்து வந்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக இரண்டு புதிய கப்பல்களுடன் 1906ம் ஆண்டு களத்தில் இறங்கினார். உள்ளூர் வணிகர்களின் ஆதரவு இருந்ததால், சுதேசி நீராவி கப்பல் போக்குவரத்து கம்பெனி சிறப்பாக செயல்பட்டது.
பாரதியாருடன் நட்பு பாராட்டிய இவர், 1907ல் நடந்த சூரத் காங்., மாநாட்டில் அவருடன் கலந்து கொண்டார். இது தவிர துாத்துக்குடியில் கோரல்மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கொடுத்தார். இவரது நடவடிக்கைகள் ஆங்கிலேயருக்கு எரிச்சலை ஏற்படுத்தின. இதனால் கலகம் விளைவித்தார் என குற்றம் சாட்டி 1908ல் கைது செய்யப்பட்டார். இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார். வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
சிறையில் அவர் அரசியல் கைதியாக நடத்தப்படவில்லை. செக்கிழுத்தல் உள்ளிட்ட கடும் சித்ரவதைகளுக்கு ஆளானார். 1912ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்த காலத்தில் அவரது கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரால் முடக்கப்பட்டது. விடுதலைக்குப்பின் சிறிது காலம் வணிகம், அரசியல், வழக்கறிஞர், நுால் எழுதுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். 1936, நவ. 18ல் காலமானார்.