"செங்கலை வைத்து அரசியல் செய்த உதயநிதி ஒரு செங்கலையாவது நட்டுள்ளாரா?" – விஜய பிரபாகரன்

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை வீடியோ கேம் போல் வளைந்து நெளிந்து உள்ளது என சேலம் ஆத்தூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய பிரபாகரன் பேசினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தேமுதிக சார்பில் நதிநீர் இணைப்பு, ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம், சேலம் சென்னை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், தமிழகத்தில் தற்போது போதை பொருட்கள் கஞ்சா பொருட்கள் அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
சென்னையிலிருந்து வரும் வழியில் கள்ளக்குறிச்சி கன்னியாமூர் பள்ளியை பார்த்தேன். அனைத்து அரசியல் கட்சியினரும் அந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு நியாயம் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதா மரணத்தை அரசியலாகினர்.
image
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. உதயநிதி ஒரு செங்கலை வைத்து கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார். தற்போது ஒரு செங்கலையாவது நட்டு வைத்துள்ளனரா என கேள்வி எழுப்பினார்.
தேமுதிக தலைவர் உடல்நலம் குன்றிய காரணத்தால் அதிகம் வெளிவரவில்லை. எனினும் அவர்கள் வளர்ப்பு நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்வோம். குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். மேட்டூர் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள நதிகளுடன் இணைக்க வேண்டும்,
image
ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அமையும் என்று தெரிவித்து விட்டு பல இடங்களில் இரண்டு வழிச் சாலையாகவே உள்ளது. இதனால் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது.
இச்சாலை வீடியோ கேம் போல வளைந்து நெளிந்து காணப்படுகிறது. நடுவில் ஒரு குச்சி வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இச்சாலையை உடனடியாக நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.