சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.410 கோடி செலவில் 9 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுர ஒருங்கிணைந்த கீழமை நீதிமன்றங்களுக்கான கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பழைய சட்டக் கல்லூரி வளாகத்தை புனரமைக்கும் பணியின் தொடக்க விழா, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் வரவேற்புரை ஆற்றிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, “புதிதாக கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 150 கீழமை நீதிமன்றங்கள் அமைய உள்ளன. இதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை நீதித்துறைக்கு பரிசாக வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பழைய சட்டக் கல்லூரி வளாகத்தை சீரமைத்து அங்கு உயர் நீதிமன்றம் செயல்படப் போகிறது. உச்ச நீதிமன்ற சர்க்யூட் பெஞ்ச் இந்த கட்டிடத்தில் அமைய வேண்டும் என்ற எல்லோருடைய கனவும் விரைவில் நனவாக என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.
பழைய சட்டக் கல்லூரி வளாக புனரமைப்பு பணியை தொடங்கி வைத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், “சென்னை உயர் நீதிமன்றத்தின் அழகையும். பாரம்பரியத்தையும் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் தேவை. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் மட்டுமே, நிலுவை வழக்குகள் குறைந்துவிடாது. வழக்குகளை அறிவியல்பூர்வமாக அணுகினாலே நிலுவை எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிட முடியும்” என்றார்.
புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் பேசியதாவது:
இங்கு நீதி கம்பீரமாக நிலைநாட்டப்படுவதை போல இந்தோ சார்சனிக் முறையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடமும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலக நீதித்துறைக்கே அடையாளமாக சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம் திகழ்கிறது. இதே அழகுடன், கலைநயத்துடன் கம்பீரமாக புதிய கட்டிடமும் அமைய வேண்டும்.
சென்னையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டிடங்கள் அதிகமாக உள்ளன. அத்தகைய பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பது என்பது, நமது வரலாற்றை பாதுகாப்பது போன்றது என்பதால் தமிழக அரசு அதில் கவனமாக உள்ளது. நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்தவை. அத்தகைய திராவிட மரபுவழி வந்த இந்த அரசும். நீதித்துறையை உயர்ந்த இடத்தில் வைத்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது.
நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளித்து, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இங்கு முன்வைக்கிறேன். தமிழக அரசு சட்டத்தின் அரசாக, சமூகநீதியின் அரசாக, நீதித்துறையின் தீர்ப்பை மட்டுமல்ல, அதன் ஒற்றை சொல்லையும் மதித்து நடக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசும்போது,“நாடு முழுவதும் 4.7 கோடி நிலுவை வழக்குகளுடன் இந்திய நீதித்துறை இக்கட்டான சூழலில் உள்ளது. இந்நிலை மாற இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பான பங்களிப்பாக இருக்கும்” என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசும்போது,“பாரம்பரியமிக்க உயர் நீதிமன்ற வளாகத்தை கட்ட அப்போது ரூ.12 லட்சத்து 98 ஆயிரத்த 163 மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் தற்போதும் பலமாக, உறுதியாக உள்ளது. இன்று புதிய கட்டுமானங்களுக்கு பல கோடி செலவிடும் சூழலில் புதிய கட்டிடங்களும் அதுபோல உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.
விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, க.பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா நன்றி கூறினார்.