கொரோனா பெருந்தொற்றின்போது, தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஊரடங்கு சமயத்தில், மக்களின் நலன் மற்றும் தடுப்பூசி குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, வெகு வேகமாகவே சுகாதாரத்துறை தொழில்நுட்பத்தில் விரைவாகக் கால் பதிக்கத் தொடங்கியது.
சுகாதாரத்துறையின் இத்தகைய தொழில்நுட்ப மாற்றம், எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது குறித்தும், எந்தளவுக்குச் சுகாதாரத்துறை அமைப்புகள் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான CloudSEK ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்நிறுவனம் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “உலக அளவில் 2021-ம் ஆண்டில், சுகாதார அமைப்பு மீதான சைபர் தாக்குதல்களில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.
அதாவது இந்திய அரசு, தடுப்பூசி செலுத்தப்பட்ட தனிநபர்களின் விவரங்களைச் சேகரிப்பதற்காகக் கோவின் (COWIN) ஆப்பை உருவாக்கியது. ஆகஸ்ட் 17-ம் தேதி வரை தனிநபருக்காக உருவாக்கப்பட்ட 23. 3 கோடி சுகாதார கணக்கில், முக்கால் பாகம் கோவின் ஆப்பில் உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் தரவுத் தளங்களைப் பயன்படுத்தியே இந்தக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் பலருக்கு தங்கள் பெயரில் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் விவரங்களுடன் சுகாதார கணக்குகள் உருவாக்கப்பட்டிருப்பது கூடத் தெரியாது.
“தொற்றுநோயானது சுகாதாரத்துறையை, முழுமையாகக் கையாளத் தெரியாத புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்தி உள்ளது. தொழில்நுட்பத்தை நோக்கிய அரசின் இந்த மாற்றம் சீரானதாக இல்லை, இது சைபர் செக்யூரிட்டியில் இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இடைவெளி, சைபர் அட்டாக்கர்களுக்கு சாதமாக மாறியுள்ளது’’ என்று CloudSEK குறிப்பிட்டுள்ளது.