சைரஸ் மிஸ்திரி சாலை விபத்து: ட்வீட் மூலம் உறுதிமொழி எடுத்த ஆனந்த மகிந்திரா

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று ஒரு சாலை விபத்தில் உயிர் இழந்தார். அவர் உயிரிழக்க காரணமாக இருந்த கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்று “நாம் அனைவரும் நமது குடும்பங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்” என்று உறுதிமொழியை பதிவிட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி பின் இருக்கையில் இருந்ததாகவும், அப்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனந்த மகிந்திராவின் ட்வீட்டும் இந்த செய்தியின் மீது கவனம் செலுத்தியுள்ளது. 

“காரின் பின் இருக்கையில் அமர்ந்தாலும், எப்போதும் சீட் பெல்ட்டை அணிவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். மேலும் அந்த உறுதிமொழியை உங்கள் அனைவரையும் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் நமது குடும்பங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்” என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எழுதியுள்ளார்.

54 வயதான சைரஸ் மிஸ்திரி, குஜராத் மாநிலம் உத்வாடாவில் இருந்து மும்பை செல்லும் வழியில் ஞாயிற்றுக்கிழமை விபத்தில் உயிரிழந்தார். அவர் டாடா குழுமத்தின் முன்னாள் சுயேச்சை இயக்குனரான டேரியஸ் பண்டோல், அவரது மனைவி அனாஹிதா பந்தோல் மற்றும் சகோதரர் ஜஹாங்கீர் பண்டோல் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

மும்பையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் அனாஹிதா பண்டோல், மெர்சிடிஸ் காரை ஓட்டி வந்தார். அதிவேகமாக மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைப் டிவைடர் மீது மோதியிருக்கலாம் என்று போலீஸார் கூறுகின்றனர்.

சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜஹாங்கீர் பண்டோல் ஆகியோர் சீட் பெல்ட் அணியாமல் பின் இருக்கையில் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அனாஹிதா பண்டோல் மற்றும் டேரியஸ் பண்டோல் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சைரஸ் மிஸ்திரியின் மரணம் கார்ப்பரேட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார வலிமையில் நம்பிக்கை கொண்ட ஒரு நம்பிக்கைக்குரிய வணிகத் தலைவர் என்று அவரை வர்ணித்தார்.

சைரஸ் மிஸ்திரியின் செயல்திறனை டாடா சன்ஸ் நிறுவனம் விமர்சித்ததையடுத்து, 2016-ம் ஆண்டு நடந்த ஒரு போர்டுரூம் சதியில் அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது வெளியேற்றம் மிஸ்திரிகளுக்கும் டாடாக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்த நீதிமன்ற மற்றும் போர்டுரூம் சண்டையை மீண்டும் அதிகப்படுத்தியது. 

சைரஸ் மிஸ்திரியின் பதவி நீக்கம் சட்டப்பூர்வமானது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.