ஜப்பானில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. மே 1ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்து 975 பெண்கள் ஆசிரியர் பணியிடங்களில் உள்ளனர் என்று அந்நாட்டு கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளி அளவிலும் பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
1992ல் வெறும் 12,380 பெண் ஆசிரியர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் இருந்த நிலையில் 2022ல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல் பட்டப்படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் 1,201,050 மாணவிகள் உள்ளனர். இது மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 45.6% ஆகும். பெண்களின் சமூகப் பங்களிப்பும் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் ஜப்பானில் குழந்தை பிறப்புவிகிதம் குறைவதால், ஆரம்பப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது.
ஆட்டிஸம் இன்னும் பிற குறைபாடுகளால் கற்றல் சவால் கொண்ட குழந்தைகள் அவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் சேரும் விகிதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை சரியாக அடையாளம் கண்டு அவர்களை சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது அதிகரித்திருப்பது நல்ல அடையாளமே என்று அரசு தெரிவித்துள்ளது.