மும்பை : மிகப் பெரும் தொழில் குழுமமான, ‘டாடா சன்ஸ்’ தலைவராக இருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி, 54, மஹாராஷ்டிராவில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.’ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்’ என்ற மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைவரான, மறைந்த பலோன்ஜி மிஸ்த்ரியின் இளைய மகன் சைரஸ் மிஸ்திரி. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக அளவு பங்குகளை இந்த நிறுவனம் வைத்துள்ளது.டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குனர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார்
சைரஸ் மிஸ்திரி. கடந்த 2012ல் அதன் தலைவராக இருந்த ரத்தன் டாடா, 75 வயதைக் கடந்ததால் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்றார்.டாடா சன்ஸ் குழுமத்தின், 142 ஆண்டு வரலாற்றில், டாடா குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டது அது இரண்டாவது முறை. ஆனால் நான்கு ஆண்டுக்குள் அவர் அந்தப் பதவியில் இருந்து விலக நேரிட்டது.இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு, நேற்று தன் ‘மெர்சிடஸ்’ காரில் பயணித்தார் சைரஸ் மிஸ்திரி. மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பைக்கு அருகே, பால்கர் மாவட்டத்தில், சூர்யா நதியின் மீதுள்ள பாலத்தில் சென்றபோது, சாலைத்தடுப்பில் மோதி அந்தக் கார் விபத்துக்குள்ளானது.
இதில், சைரஸ் மிஸ்திரி மற்றும் அவருடன் பயணித்த ஜஹாங்கிர் பன்டோல் உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற அனய்தா பண்டோல் மற்றும் உடன் பயணித்த டார்யஸ் பண்டோல் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு, பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ”எதிர்பாராத இந்த மரணம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மிகவும் நம்பிக்கை அளிக்கும் தொழிலதிபரான அவர், நாட்டின் பொருளாதார பலத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்,” என, பிரதமர் நரேந்திர மோடி, தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement