திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ரித்திகா என்ற 7 வயது மகளும், பிறந்து 40 நாட்களே ஆன மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்ததால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் தென்னந்தோப்பில் காவலுக்காக உள்ள உமாபதியின் சகோதரி செல்வி வீட்டிற்கு கணவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளனர். மேலும் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த நதியா பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து தாய் மற்றும் சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து உமாபதி மற்றும் அவரது சகோதரி செல்வி ஆகியோரிடம் உம்ராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: குடும்பத்துடன் தடுப்பணையில் குளித்தபோது விபரீதம் – நீரில் மூழ்கி சிறுமி உட்பட 3 பேர் பலிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM