திருமயம் : திருமயம், அரிமளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சம்பா நடவுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த மாதம் அப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்திருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நீர் நிலைகளில் கணிசமாக நீர்மட்டம் உயர்ந்து கொண்டு வருகிறது.
இது முழு சம்பா பருவ விவசாயத்திற்கும் போதுமான நீர் இல்லை என்ற போதும் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். தற்போது நாற்றங்கால் தயார் செய்து எதிர்வரும் நாட்களில் வரும் பருவ மழை நீரை கொண்டு நடவு பணியை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் எண்ணுகின்றனர். அதேசமயம் பெரும்பாலும் கிணறு பாசனம் உள்ள விவசாயிகள் சம்பா நடவுக்கு நாற்றங்காலை தயார் செய்து நெல் விதைப்பு செய்துள்ளனர்.
இதேபோல் மழை தொடர்ந்து பெய்து வந்தால் அனைத்து விவசாயிகளும் சம்பா பயிர் நடவு செய்ய தயாராக வாய்ப்புள்ளது. இதனிடைய நேற்று மாலை அரிமளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமும், திருமயம் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.