சென்னை: “ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும்” – இது ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் வரும் வசனம். இவ்வாறு, மக்களின் ஆசையை தூண்டி வெவ்வேறு விதமான மோசடிகள் தினமும் நடந்து வருகின்றன.
இந்த மோசடி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருப்பது கடன் தருவதாக, செல்போன் செயலி மூலம் பணம் பறித்தல். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:
பொதுமக்களை போனில் தொடர்பு கொள்ளும் நபர்கள், குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறுவார்கள். எஸ்எம்எஸ் மூலம் கோரிக்கை விடுப்பார்கள். தங்களது கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், தேவைப்படும் போது கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பார்கள்.
இதனால் ஈர்க்கப்படுவோர் கடன் செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வார்கள். அதோடு, தங்கள் போனில் இருக்கும் தொடர்பு எண்கள், கேலரி, லொக்கேஷன் உட்பட அனைத்து விவரங்களையும் பயன்படுத்திக் கொள்ள, சம்பந்தப்பட்ட கடன் செயலிக்கு அனுமதியும் கொடுத்து விடுவார்கள். கடன் செயலியில் கேட்டபடி, ‘செல்ஃபி’யை பதிவிடுவார்கள்.
மோசடி நபர்கள் அதுவரை, ‘ரூ.1 லட்சம்கடன் பெறலாம்’ என்று கூறுவார்கள். ஆனால், வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் செயலியில் பதிவிட்ட பிறகு, ரூ.2 ஆயிரம்முதல் ரூ.7 ஆயிரத்துக்கு மேல் பெற முடியாது என நிபந்தனை விதிப்பார்கள்.
90 நாட்கள் வரை வட்டி செலுத்த வேண்டாம் என அவர்கள் கூறியதை நம்பி, தோராயமாக ரூ.5 ஆயிரம் கடன் பெற்றால், நமது வங்கி கணக்குக்கு 60 சதவீத பணம் மட்டுமே வந்து சேரும். எஞ்சிய தொகையை வட்டியாக முதலிலேயே எடுத்துக் கொள்வார்கள். அடுத்த 3 நாட்கள் முதல், அவர்கள் கொடுத்த கடன் தொகை மட்டுமின்றி, கூடுதலாகவும் கேட்டு மிரட்டுவார்கள்.
கொடுக்காவிட்டால், ஆபாசமாக திட்டுவார்கள். நமது கேலரியில் இருந்து அவர்கள் ஏற்கெனவே எடுத்த புகைப்படங்களை மார்ஃபிங் செய்து கடன் பெற்றவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புவார்கள். உத்தர பிரதேசம், ஹரியாணா,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தபடி இதுபோன்ற மோசடி கும்பல்கள் செயல்படுகின்றன.
மற்றொரு வகை மோசடி
வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று கூறி, ‘லிங்க்’ ஒன்றை பலரது செல்போனுக்கு அனுப்புவார்கள். ஆர்வமாக இருப்பவர்களிடம் முதல் கட்டமாககுறைவான முன்பணம் கேட்பார்கள். பணம் செலுத்தியதும் எளிதான புராஜக்ட் ஒன்றை கொடுப்பார்கள். அதை செய்து முடித்ததும், 2 மடங்காக பணத்தை சம்பந்தப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்புவார்கள். அடுத்தடுத்து இதேபோல இரட்டிப்பு பணம் அனுப்புவார்கள்.
பின்னர் சில்வர், கோல்டு, பிளாட்டினம் என அடுத்தடுத்த நகர்வுகள் செல்லும்.இறுதியில் நமது ஆர்வத்தை பொருத்து ரூ.1 லட்சம் முதல் பல லட்சம் வரைகட்டச் சொல்வார்கள். இரட்டிப்பாகும் ஆசையில் நம்பி, பணத்தை கட்டினால், அதன் பிறகு, அந்த கும்பலை தொடர்புகொள்ளவே முடியாது. இப்படி ஐ.டி. உட்பட பல துறைகளை சேர்ந்தவர்களும் கோடிக்கணக்கில் இழந்துள்ளனர். சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் 70% பேர் புகார் அளிப்பது இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் உடனே புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இணையதளம், செயலியில் கவனம் அவசியம்
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது. ஸ்மார்ட்போன்களில் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. பணத்தை யாரும் இலவசமாக தரமாட்டார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற மின்னஞ்சல், குறுந்தகவலை தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட இணையதளங்களில் நுழையக் கூடாது. உங்கள் கணினி, லேப்டாப்பில் தனிப்பட்ட தகவல்கள் இருந்தால், அவை பாதுகாப்பாக இருக்க, ‘பாஸ்வேர்டு’ பயன்படுத்தி, லாக் செய்துவைக்க வேண்டும். ஏமாற்றப்பட்டது தெரிந்த உடனேயே, வங்கிகள், சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் கொடுப்பதன் மூலம், சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கை முடக்கி, பணம் பறிபோவதை தடுக்கலாம். போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினால், குற்றவாளிகளை எளிதாக பிடிக்க முடியும். மேலும் பலர் பாதிக்கப்படாமலும் தடுக்கலாம்.