சீனியர்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில், சர்ப்ரைஸ் என்ட்ரியாக கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு டிக் அடிக்கப்பட்டவர் கல்பனா ஆனந்தகுமார். எந்தப் பதவியிலும் இல்லாதத் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கல்பனாவின் நியமனம் வரவேற்கப்பட்டது.
ஆனால், சமீப காலமாக அவரை சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீவிர விசுவாசம், அதிகாரிகளுடன் பனிப்போர், கணவர் ஆனந்தகுமாரின் ஆதிக்கம் என ஏராளமான சர்ச்சைகள் உள்ளன.
கடந்த மாதம் தான் அவரின் கணவர் ஆனந்தகுமார், வசூல் செய்வது தொடர்பான ஓர் ஆடியோ வெளியானது. இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் மேயருக்கு புதிய இனோவா கிரிஸ்டா கார் வாங்கப்பட்டுள்ளது. புதிய கார் வாங்கி, அதை மேயர் பயன்படுத்தத் தொடங்கி சில வாரங்கள் ஆகிவிட்டன.
ஆனாலும் அவர் பதிவு எண் இல்லாமலயே அவர் தினசரி அந்தக் காரை பயன்படுத்தி வருகிறார். “சமூகத்தில் உயர் பொறுப்பில் உள்ள மேயரே இப்படி செயல்படலாமா. விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான்.” என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து மேயர் கல்பனாவிடம் விளக்கம் கேட்டபோது, “மாநகராட்சி சார்பில் ஆணையர் மற்றும் மேயர் இருவருக்கும் புதிய கார் வாங்கப்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களுக்கும் பதிவு எண் கொண்ட பலகை ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தவரை, வாகனம் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும்,
விரைவில் அங்கீகரிக்கப்பட்ட வாகன டீலரிடம் இருந்து, ஆர்.டி.ஓ வாகன எண் பொறிக்கப்பட்ட பலகையை நேரடியாக வழங்க உள்ளதாகவும் கூறுகின்றனர். மேயர் வண்டிக்கு 7800 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. வாகன எண் பலகை விரைவில் ஒட்டப்படும்.” என்றார்.