புதுடெல்லி: பயண விடுப்பு சலுகை ஊழல் வழக்கில் முன்னாள் எம்.பி. அனில் குமார் சஹானிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் சஹானி, 2010-ல் நடந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானார். பின்னர் 2012 முதல் 2018 வரை மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தார். இவர், இப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் பிஹார் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தபோது, பயணவிடுப்பு சலுகையை (எல்டிசி) அனில் குமார் முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முதலில் விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இதையடுத்து, அனில் குமார் சஹானி உள்ளிட்ட மேலும் சிலர் மீது 2013-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் அனில் குமார் உள்ளிட்டோர் மீது, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், விமானத்தில் பயணம் செய்ததாகவும் ஓட்டலில் தங்கியதாகவும் போலி ரசீதுகளை காட்டி மாநிலங்களவை செயலகத்திடம் இருந்து ரூ.23.71 லட்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அனில் குமார் சஹானி, என்.எஸ்.நாயர் மற்றும் அர்விந்த் திவாரி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்நிலையில், அனில் குமார் உள்ளிட்ட மூவருக்கும் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதேநேரம், மேல்முறையீடு செய்ய வசதியாக வரும் அக்டோபர் 6-ம் தேதி வரை அனைவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும் ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான தனி நபர் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.