தாகா : ”இந்தியாவுடனான எங்கள் நட்பு, எங்கள் நாடு உருவானதில் இருந்து துவங்கியது. உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டு வந்தது, கொரோனா தடுப்பூசி வழங்கியது என, பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நண்பராக விளங்குகிறார்,” என, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, அரசு முறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகிறார்.
இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:இந்தியா, வங்கதேசம் இடையேயான நட்புறவு மிகவும் நீண்டது; ஆழமானது; நெருக்கமானது. வங்கதேசம் தனி நாடாக 1971ல் உருவாவதில் இருந்து, தொடர்ந்து எங்களுக்கு இந்தியா சிறந்த உதவிகளை செய்து வருகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் போர் மூண்டதும், அங்கு சிக்கிய இந்திய மாணவர்களை, இந்திய அரசு மீட்டு வந்தது. அப்போது, எங்கள் மாணவர்களையும் அழைத்து வந்து சிறந்த நட்பை வெளிப்படுத்தியது.அதுபோல, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை எங்களுக்கு வழங்கி, நட்புறவை இந்தியா மேலும் வலுப்படுத்தியது. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எங்கள் நாட்டின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின், 100வது பிறந்த நாள் விழா மற்றும் நாட்டின் சுதந்திரத்தின் பொன் விழாக்களில், ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோதும், இரு நாடுகளின் நட்புறவை மதித்து அவர்கள் வங்கதேசம் வந்தது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு மிகவும் வலுவாக உள்ளது. ஒரு சில பிரச்னைகள் இருந்தாலும், பேச்சின் வாயிலாக அவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது.இந்தியா – சீனாவுக்கு இடையேயான பிரச்னையில் வங்கதேசம் தலையிடாது. பொருளாதாரத்தில் வங்கதேசம் நிலைத்தன்மையுடன் உள்ளது. வாங்கிய கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தி வருகிறோம். இதனால் இலங்கைக்கு ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடி எங்களுக்கு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement