காக் : புதிய பார்லிமென்ட் கட்டட வளாகத்தை அலங்கரிப்பதற்காக கையால் நெய்யப்படும் உலகப்புகழ் வாய்ந்த தரைவிரிப்புகள் காஷ்மீரில் தயாராகி வருகின்றன.டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய லோக்சபா மற்றும் ராஜ்யசபா அரங்கிற்குள் போடப்பட உள்ள, ‘கார்பெட்’ எனப்படும் தரைவிரிப்புகள் தயாரிக்கும் பணி, காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் உள்ள காக் என்ற இடத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள, ‘தாஹிரி கார்பெட்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இந்த பணி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 32 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம், கையால் நெய்யப்படும் தரைவிரிப்புகளை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் குவாமர் அலிகான் கூறியதாவது:புதிய பார்லி., கட்டடத்துக்காக, 12 தரை விரிப்புகளை நெய்ய சொல்லி கடந்த ஆண்டு அக்டோபரில் எங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.ஒவ்வொரு தரைவிரிப்பும் 11 அடி நீளமும், 8 அடி அகலமும் உடையது. அவை வட்ட வடிவில் போடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பாரம்பரிய, ‘கனி’ எனப்படும், ‘டிசைன்’ பின்பற்றப்பட்டு உள்ளது.
தரைவிரிப்பு தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் வினியோகம், டிசைன், நெய்தல் உள்ளிட்ட பணிகளில், 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். ‘டிசைன்’ செய்வதற்கு மட்டும் மூன்று மாதங்கள்ஆனது. ஏற்கனவே ஒன்பது தரைவிரிப்புகளை முடித்து கொடுத்துவிட்டோம். மீதமுள்ள பணியில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.இன்னும் 20 நாட்களில் முழுமையாக முடிந்துவிடும்.இதன் வாயிலாக, காஷ்மீரின் பாரம்பரிய தரைவிரிப்புகள் உலகப் புகழ் பெறும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement