மயிலாடுதுறை: ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் – துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இந்தக் கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, புதிதாக கொடிமரம், விநாயகர், ராகு, கேது விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று (05.09.2022) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும், முதல்கால யாகசாலை பூஜையும் தொடங்கியது.

ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்

தொடர்ந்து இன்று ஆறாம்கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசப் புறப்பாடு செய்யப்பட்டு, கோயிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. அதையடுத்து துர்கா ஸ்டாலின் கொடியசைக்க, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் சிவாச்சார்யார்கள் பூஜிக்கப்பட்ட கலசங்களில் இருந்த புனிதநீரை கோபுரக் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், நடிகர் சந்திரசேகர் மற்றும் உறவினர்கள் கோயில் பந்தலில் அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ-க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், இந்து சமய அறநிலைதுறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் எனப் பலரும் பக்தர்களுடன் கோயிலுக்கு வெளியில் நின்று கும்பாபிஷேகத்தைக் கண்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலைச் சுற்றிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மயிலாடுதுறை கலெக்டர் லலிதா முன்னிலையில் எஸ்.பி நிஷா தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.