தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்று சிறப்பித்தார். அப்போது ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை என முதலமைச்சர் ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் பாராட்டியுள்ளார். அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு, அதே போல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் மேலும் கூறினார்.
தமிழக அரசின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தபடி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவா்கள் உயா்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கியுள்ளது. ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்று சிறப்பித்தார்.
*புதுமைப்பெண் திட்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற இதுவரை சுமாா் 4 லட்சம் மாணவிகள் தமிழகத்தில் விண்ணப்பித்துள்ளனா். இதில் திட்டத்தின் முதல் கட்டமாக ஒரு லட்சம் மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள். புதிய மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். மேலும், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன.