மதுராந்தகம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் பகுதியில் பயண வழி உணவகம் செயல்பட்டு வருகிறது. இது தமிழக அரசு சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பஸ்களை நிறுத்த முடியும். இதன்காரணமாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பஸ்களும் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பஸ்களும் இந்த பயண வழி உணவகத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள், டிரைவர், கண்டக்டர்கள் ஆகியோர் சாப்பிட்டு செல்கின்றனர்.
இந்த உணவகத்துக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் மக்கள் இங்குள்ள கழிவறைகளை பயன்படுத்த சில மாதத்துக்கு முன்புவரை எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த பயண வழி உணவகத்தை ஒருவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகளிடம் கழிவறையை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் குறைந்த பட்சம் 5 முதல் 10 ரூபாய் வரை வசூலிப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். ‘பயண வழி உணவகத்துக்கு வரும் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே அதிகாரிகள் இந்த உணவகத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.