வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் காசியில் (வாரணாசி) மரணம் அடைந்தால் முக்தி பெறலாம் என்பது இந்துக்கள் பலரின் நம்பிக்கை. வாழ்க்கையில் அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டு, காசியில் கடைசி காலத்தை கழிக்க முதியவர்கள் பலர் விரும்புகின்றனர். இவர்களுக்காக பல சிறப்பு இல்லங்கள் காசியில் உள்ளன. சமீபத்தில் காசி விஸ்வநாதர் கோயில் வளாக பகுதிக்குள்ளேயே ‘முக்தி பவன்’ என்ற இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு வாழ்வின் இறுதி நாட்களை கழிக்க 6 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் உதய்ப்பூரைச் சேர்ந்த சந்திரேசேகர் சர்மா (73) என்ற முன்னாள் ஆசிரியரும் ஒருவர். ராஜஸ்தானின் சுரு பகுதியில் இருந்து முன்னாள் சுரங்க பொறியாளர் பத்ரி பிரசாத் அகர்வால் (89) என்பவரும் இங்கு தங்கியுள்ளார். அவர் கூறுகையில், “நான் சிவ பக்தன். என்னை காசியிலிருந்து, சிவன் தன்னுடன் எடுத்துக் கொள்ள வேண்டுமென என் உள்உணர்வு கூறுகிறது. பாபா விஸ்வநாத்துக்காக காத்திருக்கிறேன்” என்கிறார்.
முக்தி பவன் போல் காசியில் கோடோவ்லியா மற்றும் ஆசி படித்துறை பகுதியிலும் சில முதியோர் இல்லங்கள் உள்ளன. ஆனால் முக்தி பவன் காசி விஸ்வநாதர் கோயில் வளாக பகுதிக்குள் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. மேலும், காசியின் முக்கிய தகன மையமாக மணிகர்ணிகா படித்துறையும் இதன் அருகே உள்ளது. காசியில் உள்ள இந்த இடம் மிகவும் புனிதமான ‘அவிமுக்த் ஷேத்ரா’ என அழைக்கப்படுகிறது.
முக்தி பவன் என்ற புதிய இல்லத்தில் 40 படுக்கைகளுடன் கூடிய வளாகம் உள்ளது. இங்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறக்கும் வரை தங்க முடியும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இங்கு இடம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டு மரண படுக்கையில் உள்ளவர்களுக்கு இங்கு தங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து காசி விஸ்வநாத் சிறப்பு பகுதி வளர்ச்சி வாரியத்தின் மண்டல ஆணையர் தீபக் அகர்வால் கூறுகையில், ” காசியில் இறக்க விரும்பிய தாந்தி ஸ்வாமிகள் முதியோர்களுக்காக விருதா சந்த் சேவா ஆசிரமத்தை இங்கு நடத்தினார். இந்த கட்டிடத்தை காசி விஸ்வநாதர் கோயில் திட்டத்துக்காக வாங்கிய போது, காசியில் இறக்க விரும்பும் முதியவர்களுக்கான இல்லத்தை காசி விஸ்வநாதர் தலத்துக்குள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது என்றார். காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் 20 கட்டிடங்கள் உள்ளன. அதில் இறப்பு நிலை மருத்துவமனையாக செயல்படும் இல்லம் ஏ.சி வசதியுடன் 3 மாடி கட்டிடமாக உள்ளது. இந்த கட்டிடத்துக்கு வைத்தியநாத் பவன் என பெயரிடப்பட்டுள்ளது.
காசி விஸ்வநாதர் கோயில் வளாக திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்ததும், இதை பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 31-ம் தேதி திறந்து வைத்தார். இதற்கான டெண்டர் உதய்ப்பூரைச் சேர்ந்த தாரா சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.
இங்கு தங்கியிருக்கும் லக்னோவைச் சேரந்த முன்னாள் தனியார் பள்ளி ஆசிரியை கவிதா வஸ்த்வா(68) கூறுகையில், “இந்த வாய்ப்பை தாரா சனஸ்தான் வழங்கியபோது, அதை உடனடியாக ஏற்று எனது இறுதி வாழ்நாளை சிவனின் தலத்தில் கழிக்க வந்தேன்” என்கிறார். சிவனின் காலடியில் கடைசி நாட்களை கழித்து மோட்சம் அடையே வேண்டும் என்ற ஆசையுடன்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்றார்.
காசியில் ஆசி படித்துறையில் உள்ள முக்தி இல்லத்திலும் 40 பேர் தங்க முடியும். இது கடந்த 1920-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு இடம் பிடிக்க பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். ‘காசி லாப் முக்தி பவன்’ என அழைக்கப்படும் முதியோர் இல்லம் கடந்த 1958-ம் ஆண்டு முதல் இயங்குகிறது. இங்கு மரணபடுக்கையில் உள்ளவர்கள் மட்டுமே தங்க முடியும்.
இங்கு 2 மருத்துவர்கள், 6 செவலியர்கள், சமையல் ஊழியர், துப்புரவு ஊழியர்கள் உள்ளனர். மருத்துவரின் ஆலோசனைப்படியே இங்கு இருக்கும் முதியவர்களுக்கு அவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப உணவு வழங்கப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
இந்த இல்லத்தை நடத்தும் அமைப்புகள் நன்கொடையில் இயங்குகின்றன. இங்கு தங்கியிருக்கும் முதியவர்கள் ஆன்மீக நடவடிக்கைகள் மற்றும் யோகாவில் ஈடுபடுகின்றனர். காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் செல்கின்றனர்.
காசியின் தற்போதைய நிலை குறித்து சந்திரசேகர சர்மா கூறுகையில், ” காசிக்கு நான் சிறு வயது முதல் வந்து செல்கிறேன். காசி கோயிலுக்கு வருவதில் பல சிரமங்களை முன்பு சந்தித்துள்ளேன். ஆனால் நான் இந்த இல்லத்தில் தங்கவந்தபோது, இப்பகுதியை பிரதமர் மோடி பல வசதிகளுடன் புதுப்பித்துள்ளதை கண்டு திகைத்துவிட்டேன்” என்றார்.