பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அரசியலில் நேர்மை, மக்கள் சேவை ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஆசியாவை சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டிற்கான விருதிற்கு கேரள மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் கொரோனா தொற்று மிகவும் தீவிரமாக பரவிக் கொண்டிருந்த சூழலில், சிறப்பான முறையில் செயல்பட்டு நோய்ப் பரவலை குறைக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் அவரது மக்கள் சேவையை பாராட்டி ரமோன் மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விருதை வாங்க தனக்கு விருப்பமில்லை என்று ஷைலஜா அதிரடி காட்டியுள்ளார். ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் இந்த விருதை வேண்டாம் என்று ஏன் கூறினார்? என்பது தான் இணையத்தின் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
கே.கே.ஷைலஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்டதும் கட்சி தலைமையுடன் ஆலோசித்து முக்கிய முடிவு எடுத்தார். அதாவது, விருதிற்கு என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி. ஆனால் பணிவுடன் விருதை மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக செயல்பட்டவர். இவரது ஆட்சியே கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி கொண்டு வரப்பட்டதே என்று சொல்லப்படுகிறது. ரமோன் மகசேசே பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த கம்யூனிஸ்ட்கள் மீது மிக மோசமான வன்மத்தை நிகழ்த்தியவர் என்ற விமர்சனங்கள் உண்டு. எனவே இவரது பெயரில் வழங்கப்படும் விருதை ஏற்க முடியாது என்று இந்தியாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை முடிவு செய்தது.