ரெண்டு அஸ்திரங்கள்… பாஜக மாஸ்டர் பிளான்- சமாளிக்குமா காங்கிரஸ்?

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 8 ஆண்டுகளை கடந்து விட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் மக்களவை தேர்தல் வந்துவிடும். தற்போது தான் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை
காங்கிரஸ்
கட்சி கையிலெடுத்துள்ளது. பாரத் ஜூடோ யாத்திரை (Bharat Jodo Yatra) என்ற பெயரில் கன்னியாகுமரியில் வரும் 7ஆம் தேதி பாத யாத்திரையை தொடங்கவுள்ளனர். 12 மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் இந்த யாத்திரை நிறைவு பெறுகிறது. சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் கடக்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் கொடிக்கு பதிலாக மூவர்ணக் கொடியே பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ், பாஜக அரசு, பிரதமர் மோடி, அவருடைய அரசு ஆகியவற்றை குறிவைத்து விமர்சனங்களை, அவலங்களை முன்வைக்க இருக்கின்றனர்.

அதாவது, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி பாஜகவிற்கு எதிராக ஒன்று திரட்ட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. இந்த சூழலில் காங்கிரஸின் வியூகத்தை முறியடிக்கும் வகையில் இரண்டு முக்கிய விஷயங்களை கையிலெடுத்து தீவிரம் காட்டப் போவதாக பாஜக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஊழல் மற்றும் குடும்ப அரசியல்.

இதுதொடர்பான விமர்சனங்களை முன்வைத்து காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. பாஜகவிற்கு எதிரான போராட்டம் வலுக்க வலுக்க, அக்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸிற்கு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஜவஹர்லால் நேரு முதல் நேஷனல் ஹெரால்டு வரை பெரிய லிஸ்ட் போட்டு தயார் நிலையில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் மித்ரா கூறுகையில், ஊழலை யாரால் ஒழிக்க முடியுமோ, அவர்கள் தான் நாட்டையும் ஒற்றுமைப்படுத்த முடியும். அந்த தகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. ஏனெனில் அவர்களால் ஊழலையும் விட முடியாது.

இந்தியாவையும் ஒற்றுமைப்படுத்த இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார். பாரத் ஜூடோ யாத்திரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் முதல் பாஜக நிர்வாகிகள் வரை பலரும் காங்கிரஸிற்கு எதிராக கருத்து மோதல்கள், பதிலடிகள், குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை முன்வைக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எனவே பாரத் ஜூடோ யாத்திரையின் தொடக்கத்தால் தேசிய அளவிலான அரசியல் சலசலப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.