விருதுநகர்: கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக, இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் வரத்து குறைந்தது. இதனால், அதன் விலை கடுமையாக உயர்ந்தது. 2019, டிசம்பரில் 15 கிலோ பாமாயில் டின் ரூ.1,200க்கும் குறைவாக இருந்தது. கொரோனாவால் படிப்படியாக விலை உயர்ந்து, கடந்த மே மாதம் 15 கிலோ டின் பாமாயில் ரூ.2,560க்கு விற்பனையானது. தற்போது இந்தோனேசியாவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், பாமாயில் விலை குறைந்து வருகிறது. கடந்த ஜூலையில் பாமாயில் டின் திடீரென ரூ.250 விலை குறைந்தது. மேலும், படிப்படியாக விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் பாமாயில் டின் (15 கிலோ) மேலும் ரூ.200 விலை குறைந்துள்ளது.
இதன்படி, கடந்த வாரம் ரூ.1960க்கு விற்ற பாமாயில் டின் இந்த வாரம் ரூ.1760க்கு விற்பனையானது. பாமாயில் விலை சரிவால் கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.50 விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.2950க்கு விற்ற கடலை எண்ணெய் டின் இந்த வாரம் ரூ.2,900க்கு விற்பனையானது. எள் வரத்து இல்லாததால், நல்லெண்ணெய் டின்னுக்கு ரூ.165 விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.5,115க்கு விற்ற நல்லெண்ணெய் (15 கிலோ) டின், இந்த வாரம் ரூ.5,280க்கு விற்பனையானது.