கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி துவங்கி வரும் 2023 ஆண்டு மார்ச் 3-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையுடன் tஆதார் இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள், தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் போன்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
தவிர, ஆதார் எண் விவரத்தை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி, இந்த சிறப்பு முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது.
இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தனர். ஆதார் எண்ணை இணைப்பதால், எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த பகுதிக்கு இடம் மாறி சென்றாலும், அந்த வாக்காளர் எளிதாக தனது பெயரை அந்த இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.