லண்டனைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய நண்பருடன் ராஜஸ்தானுக்குச் சுற்றுலா செல்லும்விதமாக இந்தியா வந்தார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கிய இருவரும், மொபைல் ஆப்-ஐ பயன்படுத்தி கார் ஒன்றை முன்பதிவு செய்தனர். பின்னர் அந்த காரில் ஏறிக்கொண்டு, தெற்கு டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் பயணித்தனர்.
அப்போது காரை ஓட்டிவந்த டிரைவர், லண்டனைச் சேர்ந்த அந்த சுற்றுலாப்பயணிகள் முன் காரிலேயே சுயஇன்பம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டு சுற்றுலாப்பயணிகள் இருவருமே, டிரைவரின் செயலை எதிர்த்தபோது, டிரைவர் அவர்களை மேலும் அச்சுறுத்தியிருக்கிறார். அதைத்தொடர்ந்து, லண்டன் பெண் வழக்கறிஞர் உடனடியாக தொலைபேசியின் மூலம் போலீஸுக்கு புகாரளித்திருக்கிறார்.
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் உத்தரப்பிரதேச மாநிலம் லால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மாகன் லால் என்று தெரியவந்திருக்கிறது. இவர் கடந்த 6 மாதங்களாக டெல்லியில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அதையடுத்து போலீஸாரும், புகார் மற்றும் தகுந்த ஆதாரங்களின்படி, கார் டிரைவர் மாகன் லாலை கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், இந்த சம்பவம் நடந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் இருவரும் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், கைது செய்யப்பட்ட மாகன் லால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.