லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா என்ற புதியவகை கார் அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த மாடலின் டெலிவரி அடுத்த ஆண்டு முதல் காலாண்டு இறுதியில் அல்லது இரண்டாம் காலாண்டு தொடக்கத்தில் தான் டெலிவரி செய்யப்படும் என்று இந்தியாவின் லம்போர்கினி கார் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மாடல் கார் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து லம்போர்கினி மேலும் சில மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
சேலம், மதுரையில் லம்போர்கினி கார் விற்பனை.. லம்போர்கினி-கே ஷாக் கொடுத்த தமிழர்கள்..!
லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்
லம்போர்கினியின் ஆடம்பர ஸ்போர்ட்ஸ் காரான ஹுராகன் டெக்னிகா என்ற கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பத்தே நாட்களில் கிட்டத்தட்ட விற்று தீர்ந்துவிட்டதாக லம்போர்கினி நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுதில்லியில் ஆகஸ்ட் 25ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஹுராகன் டெக்னிகாவின் விலை ₹4.04 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லம்போர்கினி இந்தியாவின் தலைவர் ஷரத் அகர்வால் கூறியபோது, இந்தியாவில் எங்கள் வாடிக்கையாளர்களுடன் உறவை வளர்த்து இருப்பதால் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரின் தேவையை அதிகரிக்க வழிவகுத்தது. இந்தியாவில் ஒரு வாரத்தில் லம்போர்கினி ஹுராகன் மாடல் கார்களை நாங்கள் விற்றுவிட்டோம். இதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளாக எங்கள் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் ஏற்படுத்தி கொண்ட தொடர்புதான்’ என்று தெரிவித்துள்ளார்.
மணிக்கு 325 கிமீ வேகம்
லம்போர்கினி ஹுராகன் மாடல் கார் 3.2 வினாடிகளில் 0-100 kmph வேகத்துடன் 6,500 rpm இல் V10 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மணிக்கு 325 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ஸ்போர்ட்ஸ் கார் 1,379 கிலோ எடை கொண்டது.
டைனமிகா வெயிகோலோ இன்டக்ரேட்டா
இரண்டு இருக்கைகள் கொண்ட லம்போர்கினி ஹுராகன் மாடல் ஸ்போர்ட்ஸ் காரில், பின்-சக்கர திசைமாற்றி கொண்ட பின்-சக்கர ஓட்டுனர் மற்றும் லம்போர்கினி டைனமிகா வெயிகோலோ இன்டக்ரேட்டா (LDVI) அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது வாகன அமைப்புகளை ஒருங்கிணைத்து காரை கட்டுப்படுத்துகிறது.
டெலிவரி எப்போது?
இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் மும்பையில் கடந்த சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து கார்களும் விற்பனை செய்யப்பட்டது என்றாலும் இந்த கார் டெலிவரி செய்யப்படும் சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த மாடலின் காரின் டெலிவரி இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் காலண்டு இறுதியில் அல்லது இரண்டாம் காலாண்டு தொடக்கத்தில் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
மின்சார கார்கள்
2025 ஆம் ஆண்டில் Co2 உமிழ்வை 50 சதவிகிதம் குறைக்க லம்போகினி நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது. இதற்காக மின்மயமாக்கல் அமைப்பில் € 1.8 பில்லியன் முதலீடு செய்யவுள்ளது. 2024ஆம் ஆண்டில் உலகளவில் மின்சார கார்களை அறிமுகம் செய்யவும் லம்போகினி திட்டமிட்டுள்ளது.
Lamborghini Huracan Tecnica sold out 10 days after launch
Lamborghini Huracan Tecnica sold out 10 days after launch | 10 நாட்களில் விற்று தீர்ந்துவிட்ட லம்போகினி புதிய கார்.. டெலிவரி எப்போது?