டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப்படங்களை எடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியானப் படம் ‘கோப்ரா’.
இப்படத்தில் `கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை, விக்ரம் நடிப்பு மற்றும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவை சிறப்பாக அமைந்திருந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டனர். ஆனால் படத்தின் திரைக்கதையும், 3.3.3மணி நேர நீளமும், லாஜிக் ஓட்டைகளும் பார்வையாளர்களை சோர்வடைய வைத்துவிட்டது என்று கூறலாம். பார்வையாளர்களின் விமர்சனத்திற்குப் பிறகு, படத்தின் நீளம் (20 நிமிடம்) குறைக்கப்பட்டது. இருப்பினும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, தனது இன்ஸ்டாகிராமில் ‘கோப்ரா’ படம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, படத்தின் குறைகளுக்காக மனம் திறந்து மன்னிப்பும் கேட்டு கலந்துரையாடியுள்ளார். பலரும் இதற்காக அஜய் ஞானமுத்துவைப் பாராட்டினர். தனது இன்ஸ்டாகிராமில் ‘கோப்ரா’ படம் பற்றிய கருத்துக்களைத் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிடுமாறு கேட்டிருந்தார். அதில் 3.3.3 மணி நேர படத்தின் நீளம் பற்றி விளக்கமளித்த அஜய் ஞானமுத்து, “‘3’ என்பது என்னுடைய லக்கி நம்பர் அல்ல. ‘3+3+3=9’, ‘3*3*3=27’ போன்றவையும் எனது லக்கி நம்பர் இல்லை. படத்தின் காட்சிகள் மற்றும் அதில் உள்ள டீடெயில்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக அதன் நீளம் குறைக்கப்பட வேண்டாம் என்று நினைத்தோம். அது பார்வைகளுக்கு பிடிக்கும் என்று நினைத்தோம். சில பார்வையாளர்களுக்கு அது பிடித்தும் இருந்தது. பின்னர் பார்வையாளர்களின் வேண்டுகோள்படி அதை சரி செய்தோம். மேலும், நிச்சயமாக என்னுடைய அடுத்தப் படங்களில் இதை கவனத்துடன் கையாள்வேன்” என்று கூறியிருந்தார்.
படத்தின் திரைக்கதை குழப்பாக உள்ளது எனக் கேட்டிருந்த ஒரு ரசிகருக்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து, “முதலில் இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் ஒரு பார்வையாளனாக, சிந்திக்க வைக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை இப்படத்தில் நேர்மையான முறையில் முயற்சி செய்திருந்தேன். வாய்ப்பிருந்தால் இன்னொருமுறை படத்தைப் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சிகள் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், “படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ தப்பித்து வெளியாட்டில் இருக்கும்படி மாசான பின்னணி இசையுடன் காட்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அந்தக் கதாபாத்திரம் பல குற்றங்களை செய்த கதாபாத்திரம். எனவே அந்த கதாபத்திரம் தப்பித்து சுதந்திரமாக இருப்பது நியாமாக இருக்காது என்பதால்தான் கிளைமாக்ஸ் காட்சியை இவ்வாறு எடுத்துள்ளோம்” என்று பதிலளித்திருந்தார். மேலும் தனது அடுத்தப் படம் சிறப்பாக இருக்கும் என்றும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதைக் கண்ட நெட்டிசன்கள் தன் மீதும், தனது படத்தின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அஜய் ஞானமுத்து மனம் திறந்து பதிலளித்திருந்தது ஆரோக்யமான நிகழ்வாக இருக்கிறது என்று பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.