Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. அதற்குள் பல் முளைக்கத் தொடங்கிவிட்டது. எவ்வளவு சீக்கிரம் பல் முளைக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் பல் விழுந்துவிடும் என்கிறார்களே… உண்மையா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்

பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக 6 முதல் 12 மாதங்களில் பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். அரிதாக சில குழந்தைகள் பால் பற்களுடன் பிறப்பதும் உண்டு. குழந்தையின் 6-7 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து, நிலையான பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். பற்கள் முளைப்பதும், விழுவதும், திரும்ப நிலையான பற்கள் முளைப்பதும் பொதுவாக மரபியல் ரீதியாக நடைபெறும் நிகழ்வாகும். இது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும்.
சீக்கிரம் பல் முளைத்தால் சீக்கிரமே விழுந்துவிடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. பற்கள் எப்போது முளைக்கின்றன என்பதைவிடவும், பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்களையும், முளைத்த பிறகு பற்களைப் பேணும் வழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பற்கள் முளைக்கும் போது லேசான வலி, வீக்கம் என சிரமங்கள் இருக்கும். ஆனால் அதிக வலி, வீக்கம், தொடர் அழுகை போன்றவை இருந்தால் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். பல் முளைக்க உதவும் ‘டீத்திங் ரிங்ஸ்’ (Teething Rings) எனப்படும் தரமான ரப்பர் வளையங்களை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகிக்கலாம்.
தரமற்ற தயாரிப்பு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. பல் முளைத்ததும் அவற்றை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் பல் சொத்தை, ஈறுகளில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

விரலால் வெந்நீர் தொட்டு, குழந்தையின் பற்களையும் ஈறுகளையும் தேய்த்து சுத்தப்படுத்தி விட்டு, பிறகு குழந்தைகளுக்கான ஃப்ளூரைடு உள்ள பேஸ்ட் கொண்டு தேய்த்துவிட வேண்டும். விரலில் மாட்டிக்கொண்டு உபயோகிக்கும் டூத் பிரஷ் பயன்படுத்தலாம்.
பால் குடித்துக்கொண்டே குழந்தை தூங்கும்படி பழக்குவதைத் தவிர்த்தால் பல் சொத்தை ஏற்படாமல் காக்கலாம். பால் குடித்து முடித்ததும் குழந்தையின் பற்களையும் வாயையும் சுத்தம் செய்த பிறகே தூங்க வைக்க வேண்டும்.