IND Vs PAK: அர்ஷ்தீப் சிங் பற்றி அவதூறு: 'விக்கிபீடியா'வுக்கு மத்திய அரசு சம்மன்!

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புபடுத்திய விவகாரத்தில் விக்கிபீடியா நிறுவனத்திற்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.

ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் சூப்பர்-4 சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு, 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்தார்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ரிஸ்வான் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அவுட் ஆனார். ஆட்டம் பரபரப்பாக இறுதிக் கட்டத்தை நெருங்கிய போது, இக்கட்டான நேரத்தில், பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் எளிய கேட்ச் வாய்ப்பை, இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் நழுவ விட்டார். இது ஆட்டத்திற்கு திருப்புமுனையாக மாறியது. இறுதியில், ஆசிப் அலி பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், கேட்ச் பிடிக்காமல் தவற விட்டது தான், பாகிஸ்தான் அணி உடனான தோல்விக்கு காரணம் என தெரிவித்து, சமூக ஊடகங்களில் அவரை சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் விக்கிபீடியா பக்கத்தில், இந்தியா என்ற வார்த்தையை நீக்கி விட்டு, காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்து உள்ளார். இது அர்ஷ்தீப் சிங்கின் விக்கிபீடியா பக்கத்தில் பல இடங்களில் இடம் பெற்று இருந்தது. எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் சரி செய்யப்பட்டன. இதனை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விக்கிபீடியா நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. பிரிவினையை தூண்டும் வகையில், இந்த செயல் அமைந்துள்ளதால், மாற்றத்தை செய்ய எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.