`நீங்கள் வெற்றிபெறுவது என்பது தற்செயலாக நடந்துவிடாது. முன் தயாரிப்புகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.’’ – ரோஜர் மாரிஸ் (Roger Maris), அமெரிக்க பேஸ்பால் வீரர்
`நான் டாக்டராகணும்.’ இப்படி ஓர் எண்ணம் ஒரு மனிதனுக்கு எப்போது தோன்றும்? பெற்றோர்கள் சொல்லிச் சொல்லி உருவாகலாம். அல்லது பள்ளி இறுதிப் படிப்பின்போது மேற்படிப்புக்காக, எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறபோது தோன்றலாம். வெங்கடசாமிக்கு இந்த எண்ணம் தோன்றியபோது அவருக்குப் பத்து வயது. வடமலாபுரம் என்கிற அந்த குட்டி கிராமத்திலிருந்து ஏட்டுப் பள்ளிக்கூடத்துக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தேதான் போய் வர வேண்டும். அது அவருக்குப் பிரச்னையில்லை. அன்றைக்குப் பள்ளிக்கூடம்விட்டு வரும்போது ஒரு துயரச் செய்தி அவர் காதில் விழுந்தது. அவருக்கு அக்காள் முறை வேண்டும் உறவினர் பெண் ஒருவர் இறந்துபோயிருந்தார். அதுவும், பிரசவவலி தாங்காமல் இறந்துபோயிருந்தார். இப்படி அதுவரை அவருடைய உறவினர் பெண்கள் மூன்று பேர் மரணமடைந்திருந்தார்கள்.

“நம்ம ஊர்ல ஒரு ஆஸ்பத்திரியோ, டாக்டரோ இருந்திருந்தா அந்தப் புள்ளை இறந்துபோயிருக்குமா?’’ வயதான பெண்மணி ஒருவர் அவர் காதுபடவே சொல்லிக்கொண்டு போனார். அந்த கணத்தில்தான் வெங்கடசாமிக்கு `நான் டாக்டராகணும்’ என்ற எண்ணம் அழுத்தமாக விழுந்தது.
தற்போது வடமலாபுரம், விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி. அங்குதான் 1918-ம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார், இன்றைக்கு எல்லோராலும் `டாக்டர் வி’ (Dr.V) என்று அறியப்படும் கோவிந்தப்ப வெங்கடசாமி. விவசாயக் குடும்பம். அப்பா அதிகம் படித்தவரில்லை. ஆனால், வீட்டில் ஒரு குட்டி நூலகத்தையே வைத்திருந்தார். அவையெல்லாம் வெங்கடசாமியின் அறிவை விருத்தி செய்ய உதவின. ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்ததும், கோவில்பட்டி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1938-ம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு சென்னைக்கு வந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அவர் மருத்துவம் படிக்கும்போதுதான் அவருடைய தந்தை இறந்துபோனார். குடும்பத்தைத் தூக்கிச் சுமக்கவேண்டிய தலைமைப் பொறுப்பு அவர் தலையில் ஏறியது. 1944-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. 1945 – 1948-க்கு இடைப்பட்ட காலத்தில் ராணுவ மருத்துவராகப் பணி. ஆனாலும் என்ன… சோதனை அவரைத் தொடர்ந்தது; பாடாகப்படுத்தியது.
பர்மா காடுகளில் பணி. விதவிதமான பூச்சிகளின் தொல்லை. அதிலும் விஷப்பூச்சிகள். இனம் தெரியாத ஒரு பூச்சி கடித்ததில் சருமநோய். மிகவும் அவஸ்தைப்பட்டார் வெங்கடசாமி. அது தீருவதற்குள் இன்னொரு பிரச்னை. `ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ்’ (Rheumatoid Arthritis) என்கிற முடக்குவாதம் அவரைத் தாக்கியது. நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய முடியாத அளவுக்கு விரல்கள் முடங்கிப்போயின. பேனாவைக்கூடக் கையில் பிடித்து எழுத முடியாத நிலை. இந்திய ராணுவம் அவரைப் பணியிலிருந்து விடுவித்தது. `ஒரு மருத்துவராக வேண்டும்’ என்கிற கனவிலிருந்த அவரை முடக்குவாதம் தாக்கியபோது அவருக்கு வெறும் 30 வயது. `இனி என்ன… அவ்வளவுதானா… எல்லாம் முடிந்துபோய்விட்டதா?’ திரும்பத் திரும்ப இந்தக் கேள்வி மனதுக்குள் சுழல, இரண்டு வருடங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார் வெங்கடசாமி.

நாம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வாழ்க்கை வருவதில்லை; அது இழுக்கும் இழுப்புக்கெல்லாம் பணிந்து நாம்தான் அதோடு பயணம் செய்யவேண்டியிருக்கிறது. கொஞ்சம் குணமான பிறகு மகப்பேறு மருத்துவம் பயின்றார் வெங்கடசாமி. ஆனால், அவரை பாதித்திருந்த முடக்குவாதம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவருடைய விரல்கள் கோணி, வளைந்திருந்தன. இனி அவரால் எந்தப் பெண்ணுக்கும் பிரசவம் பார்க்க முடியாது. அதையே லட்சியமாகக்கொண்டிருந்த ஒரு மனிதருக்கு எப்படியிருந்திருக்கும்? ஆனால் அவர் தொய்ந்துபோய்விடவில்லை. தான் கற்ற மருத்துவதால் மக்களுக்கு ஏதாவது செய்துவிட முடியாதா என ஏங்கினார். கண் சிகிச்சை மருத்துவம் (Ophthalmology) என்ற துறையில் சேர்ந்தார்; படித்தார். அதில் முதுகலை டிப்ளமோவும், எம்.எஸ் பட்டமும் பெற்றார். கடுமையான பயிற்சி, ஆபரேஷன் செய்வதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள். களத்தில் இறங்கினார் வெங்கடசாமி. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கண் சிகிச்சை நிபுணராகப் பதவியேற்றார். அந்தத் துறையின் தலைவராகவும் ஆனார்.
உலகம் முழுக்கக் கண் குறைபாடுகளால் அவதிப்பட்டோர் பல கோடிப் பேர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியாவில் இருந்தார்கள். முறையான சிகிச்சை இருந்தால் அவர்களுக்குப் பார்வை அளித்துவிட முடியும் என்று கண்டுகொண்டார் வெங்கடசாமி. அதற்காகவே தென்னிந்தியா முழுக்கப் பல ஊர்களிலும், கிராமங்களிலும் பல கண் சிகிச்சை முகாம்களை நடத்தினார்; பல கண் பரிசோதனை உதவியாளர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அப்போதுதான் இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜான் வில்சன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரும் உலக அளவில் கண் பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான சிகிச்சைகளை அளிக்கும் தீர்மானத்தில் இருந்தார். அவரோடு வாழ்நாள் முழுக்க நட்புறவுகொண்டிருந்தார் வெங்கடசாமி. பார்வை இழந்தவர்களுக்காக ஒரு மறுவாழ்வு முகாமை அமைத்தார். ஒரு நாளைக்கு 100 கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்வதை வழக்கமாக்கிக்கொண்டார். தன் வாழ்நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கண் அறுவை சிகிச்சை (Cataract) செய்திருக்கிறார் வெங்கடசாமி.

ஒருநாள் மெக்டொனால்ட்ஸின் அலங்கார வளைவை அவர் பார்க்க நேர்ந்தது. அப்போது, தனக்குத் தானே இப்படி நினைத்துக்கொண்டார் வெங்கடசாமி… `மெக்டொனால்ட்ஸால் கோடிக்கணக்கான பர்கர்களையும், கோகோ கோலாவால் கோடிக்கணக்கான குளிர்பானங்களையும் விற்க முடியும் எனும்போது, என்னால் ஏன் சில லட்சம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாது?’ அந்தக் கனவும் நிறைவேறும் நாள் வந்தது.
அரசு கண் மருத்துவமனையிலிருந்து ஓய்வுபெற்றார். இனி என்ன… அவ்வளவுதானா? இல்லவே இல்லை. இத்தனை வருடம் பெற்ற பயிற்சிக்கும், சிகிச்சை அனுபவத்துக்கும் முடிவே இல்லை. தன் சேமிப்பையும், வீட்டை அடகுவைத்து பெற்ற பணத்தையும் கொண்டு மதுரையில் ஒரு கண் மருத்துவமனையைத் தொடங்கினார். அவருடைய ஆதர்ச குருவான அரவிந்தரின் பெயரில் மருத்துவமனை. `அரவிந்த் கண் மருத்துவமனை.’ அது 1976-ம் ஆண்டு. வெறும் 11 படுக்கைகளை மட்டுமே கொண்ட மருத்துவமனை. ஆனால், வெங்கடசாமியின் லட்சியம் உறுதியாக இருந்தது. `குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை.’ எல்லோரையும் ஒன்றாக பாவித்தார் வெங்கடசாமி. அந்த மருத்துவமனையில் ஒரு லட்சம் கண் சிகிச்சை நடந்திருக்கிறதென்றால், அவற்றில் பாதி இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலேயோ மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை என்பது அரவிந்த் கண் மருத்துவமனையில் இன்றைக்கும் கட்டாயம். இன்றைக்கு ஒரு நாளைக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் 1,500 அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. இன்றைக்கு தென்னிந்தியா முழுக்க 90 அரவிந்த் கண் சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. தன் லட்சியத்துக்குத் தடையாக இருக்குமோ என்று திருமணமே செய்துகொள்ளவில்லை வெங்கடசாமி. தன் இளைய சகோதரர் வீட்டில்தான் வசித்துவந்தார்.
வெங்கடசாமியின் சேவையைப் பாராட்டி இந்திய அரசு, அவருக்கு பத்மஸ்ரீ விருதை 1973-ம் ஆண்டு வழங்கியது. இன்னும் எத்தனையோ விருதுகளுக்குச் சொந்தக்காரர் அவர். 2006-ம் ஆண்டு தன் 87-வது வயதில் மரணமடைந்தார் வெங்கடசாமி. ஆனாலும், அவர் ஏற்றிவைத்த தீபம், இன்று அணையா தீபமாக `அரவிந்த் கண் மருத்துவமனை’ என்கிற பெயரில் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ ஏழை, எளியோரின் கண்களுக்கு ஒளி பாய்ச்சிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக இருந்தது அவருடைய `நான் டாக்டராகணும்’ என்கிற கனவு!