காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
தொடரும் மீனவர் பிரச்சனை
இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. . இலங்கை கடற்படையினரால் எல்லை மீறிய செயலால் பலலட்சம் மதிப்பிலான வலைகள், மீன்களை இழந்து வருகின்றன. இதற்கிடைடையே அவ்வப்போது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்களை தாக்குவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் கடலில் தமிழக மீனவர்கள் அச்ச உணர்வுடனே மீன்பிடிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது
12 பேர் கைது
இந்நிலையில் தான் இன்று 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அதாவது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
சிறையில் அடைப்பு
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரை பேட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
10 பேர் விடுதலை – 12 பேர் கைது
இந்நிலையில் தான் இன்று அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இவர்கள் இன்னும் சில தினங்களில் மீனவர்கள் 10 பேரும் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சிறையில் இருந்து நாகை மாவட்டத்தின் 10 மீனவர்கள் இன்று விடுதலையான நிலையில் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.