அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.
அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு தேர்வுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 11 முதல் 16-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டது. அதன்படி, தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15-ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் ஒன்றுக்கான தேர்வு நிர்வாக காரணங்களால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன் பின்னணி என்ன என்பது குறித்து துறைசார்ந்தவர்களிடம் விசாரித்த போது, “தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் 37,554 அரசுப் பள்ளிகளில் 52 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்துவருகின்றனர். இவர்களுக்குக் கற்பிக்கும் பணியில் சுமார் 2.2 லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். 4,989 இடைநிலை, 5,154 பட்டதாரி, 3,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த 13,331 பணியிடங்களையும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்தது அந்த நேரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் புதிய சட்டப்படி, ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களை நிர்ணயம் செய்வதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தமிழ்நாட்டில் முதன்முறையாக 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 7.5 லட்சம் பேர் தேர்வெழுதியதில், சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர். இதனால், தேர்ச்சி பெறாதவர்களுக்கு அதே ஆண்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில், 19,000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, அந்த 21,000 பேருக்கும் பணி வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2013-ல் நடத்தப்பட்ட தேர்வில், 26,000 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டுதான் ‘டெட்’ தேர்வில் முதல் குழப்பம் அரங்கேறியது. அதாவது, தேர்ச்சிக்கான தகுதிகளில் சில தளர்வுகளை அரசு மேற்கொண்டது. இதன் மூலம், கூடுதலாக 30,000 பேர் தகுதி பெற்றதால், 2013 ஆண்டில் கிட்டத்தட்ட 56,000 பேர் தகுதியானார்கள். இதைக் குறைக்க, தகுதி பெற்றவர்களின் வயது, 10, 12-ல் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றைக் கணக்கிட ‘வெயிட்டேஜ்’ என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், ஏற்கெனவே தகுதிபெற்ற பலர் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ‘டெட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றனர். தேர்வின்போது எந்த அறிவிப்பும் கொடுக்காமல், திடீரென ‘வெயிட்டேஜ்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதன் பிறகு நான்கு ஆண்டுகள் பணி நியமனமும் நடக்கவில்லை, டெட் தேர்வும் நடக்கவில்லை. காலிப் பணியிடங்களும் கடுமையாக அதிகரித்தன. கொரோனா காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக அதிகமானதால், ஆசிரியர் தேவை மேலும் அதிகரித்தது. இப்படியாக, இப்போது ஆசிரியர், மாணவர் விகிதாசாரத்தின்படி மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் இருப்பதும், அதற்கான தீர்ப்பு விரைவில் வர இருப்பதாலும் இப்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மாற்றம் நடந்திருக்கிறது” என்கிறார்கள்.