இரண்டு வேடங்களில் நடிக்க அவரவர் தடுமாறும் போது மூன்று வேடங்களில் அனாவசியமாக நடித்து வெற்றியும் கண்டவர் சிவாஜி கணேசன்.
இந்தியாவிலிருந்து பிராந்திய மொழியில் வாங்காள மொழிக்கு அடுத்து முதன்முதலில் ஆஸ்கர் அவார்டுக்கு சென்ற படம் தெய்வ மகன் மட்டுமே.
சிவாஜி கணேசனின் மூன்று பாத்திரங்களும் 3 வெவ்வேறு வகையில் இருக்கும். அதை உணர்ந்து நடித்திருப்பார்.
சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் கலக்கிய தெய்வ மகன்
இரட்டை வேடங்களில் நடிக்கவே நடிகர்கள் தடுமாறிய காலக்கட்டத்தில் மூன்று வேடத்தில் நடிப்பில் கலக்கியிருப்பார் சிவாஜி கணேசன். அவரது பல படங்கள் நடிப்பில் பேசப்பட்டாலும் தெய்வமகன் படத்தில் புறக்கணிக்கப்பட்ட மகன் பாசத்துக்காக ஏங்குவதும், தாய் தந்தை வெறுத்தாலும் அவர்களை நேசிக்கும் மகனாக சிவாஜி கணேசன் உருகி இருப்பார். அதற்கு ஏற்றாற்போல் ஆரூர்தாஸ் வசனமும், ஏசி திருலோகச்சந்தரின் காட்சி அமைப்பும் அற்புதமாக இருக்கும்.
வரலாற்று பாத்திரங்களின் நிழல் நாயகன் சிவாஜி கணேசன்
செப்.5 வ.உ.சிதம்பரம் பிறந்தநாள். வ.உ.சிதம்பரம் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்த பொழுது அதில் சிதம்பரமாகவே வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்ட பொம்மனை மனதில் நினைத்து பார்த்தால் சிவாஜி கணேசன் ஒருவர் தான் மனதில் தெரிவார். ராஜ ராஜ சோழனை நினைத்தால் சிவாஜி கணேசன் மனதில் தெரிவார். இப்படி பல சரித்திர நிகழ்வுகளுக்கு தன்னுடைய நடிப்பால் முத்திரை பதித்த சிவாஜி கணேசன் 3 வேடங்களில் நடித்த தெய்வமகன் திரைப்படம் செப்டம்பர் 5 இதே நாளில் வெளியானது.
உருவக்கேலியால் அனாதையாக்கப்பட்ட இளைஞனின் போராட்டம்
உருவ கேலி எந்த அளவிற்கு ஒரு மனிதன் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை அழகாக சொன்ன படம். விகாரமான உருவத்துடன் பிறப்பதும், உயரக் குறைபாடும், முகத்தோற்றமும், தோலின் நிறமும், உடல் அமைப்பு ஒருவருடைய உழைப்பால் வருவது அல்ல. அது இயற்கையின் வெளிப்பாடு. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். தன் குழந்தைகள் என்னதான் உருவத்தில் மற்ற மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது குறைபாடு இருந்தாலும் பெற்ற தாய், தந்தை அவர்களை வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். ஆனால் தெய்வமகன் படத்தின் பிரதான கருவே தன்னைப்போல் முகம் ஒரு பக்கம் விகாரமாக இருக்கும் குழந்தையை கொல்லச் சொல்லும் தந்தையாக சிவாஜி நடித்திருப்பார்.
விகாரமாக பிறந்த குழந்தையை கொல்லச் சொல்லும் தந்தை சிவாஜி
இந்த படத்தில் சிவாஜி கணேசனுக்கு மூன்று வேடம் தந்தை சிவாஜியாக விகார முகத்துடன் இருக்கும் சிவாஜிக்கும், மனைவி பண்டரி பாய்க்கும் ஆண் குழந்தை பிறக்கும் அந்த குழந்தையும் சிவாஜி போன்ற பாதி முகத்தில் பெரிய வடுவுடன் பிறந்திருக்கும். இதை பார்த்து, தனது நண்பரான பிரசவம் பார்த்த டாக்டர், மேஜர் சுந்தர்ராஜனிடம் குழந்தையை கொல்லச் சொல்லி சிவாஜி கேட்டுக்கொள்வார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும். தன்னைப் போலவே தன் பிள்ளையும் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என்று சிவாஜி கணேசன் சொல்லுவார். உன் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று சுந்தர்ராஜன் கேட்பார். குழந்தை இறந்து விட்டது என்று சொல் என்று சொல்வார். நீ சொன்னபடி செய்கிறேன் ஆனால் உனக்கும் எனக்கும் உள்ள நட்பு இத்தோடு முறிந்து முடிந்து விட்டது என்று வெறுப்புடன் சிவாஜி கணேசன் நட்பை முறித்துக்கொள்வார் சுந்தர்ராஜன்.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் சிவாஜி கணேசன்
அதன் பிறகு அந்த குழந்தையை கொல்லாமல் ஆதரவற்றோர்கள் நடத்தும் நாகய்யாவிடம் ஒப்படைப்பார். அங்கு அந்த குழந்தை பல அவமானங்களை சந்தித்து வளரும். முரட்டுத்தனமாக வளரும் குழந்தையிடம் உள்ள இசை திறமையை கண்டு அதில் கவனம் செலுத்தும் படி சொல்வார் நாகய்யா. பின்னர் அப்பா சிவாஜிக்கு இன்னொரு ஆண் குழந்தை பிறக்கும். ஒரே வாரிசாக அந்த குடும்பத்தில் வளரும் அவரும் ஒரு சிவாஜி இப்படி மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். தந்தையின் வேடத்தில் உள்ள சிவாஜியும், ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் சிவாஜியும் ஒரே மாதிரி தோற்றம் இருந்தாலும் இரண்டுக்கும் வித்தியாசத்தை காண்பிப்பார் சிவாஜி கணேசன். மூன்றாவதாக அழகான தோற்றத்துடன் பிறந்துள்ள மகனாக வரும் சிவாஜி, மேல்நாட்டு நாகரிகத்துடன் ஆங்கிலம் கலந்த சிறிது பெருமை கலந்த நடிகராக மேல் தட்டு வர்க்க பிள்ளை போல் நடித்து இருப்பார்.
அனாதை இல்லை என அறிந்து பெற்றோரை தேடி வரும் சிவாஜி
ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி நாகய்யா இறக்கும் தருவாயில் சிவாஜிக்கு பெற்றோர் இருக்கும் விஷயத்தை கூறி மருத்துவர் சுந்தரராஜனை போய் பார்க்கச் சொல்லி சொல்லிவிட்டு இறந்து விடுவார். சுந்தர்ராஜனை பார்த்து தந்தையை பற்றி சொல்லி பார்க்கவேண்டும் என சிவாஜி சொல்வார். ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்பார் எனக்கு அவர்களிடம் சேர வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லை, அவர்களை நான் பார்த்து விட்டால் ஆனந்தமாக கடற்கரைக்குச் சென்று நான் அனாதை இல்லை என்று உரக்கச் சொல்வேன் என்று சிவாஜி சொல்வார். அப்போது சிவாஜி மேஜர் சுந்தரராஜனுடைய நடக்கும் உரையாடல்கள் மிக அற்புதமாக இருக்கும். ” நான் அனாதை இல்லை அனாதை ஆக்கப்பட்டவன், நான் மிருகம் இல்ல, ஆனால் உணர்ச்சிகள கட்டுப்படுத்த எனக்கு தெரியாது , குட்டி அழகா இல்லன்னு எந்த மிருகமும் ஒதுக்கியதா கேள்விப்பட்டதில்லை, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொவார்களே நான் அந்த காக்கையாக பிறந்திருக்க கூடாதா?” என்று அரற்றுவார்.
அம்மாவை மறைந்திருந்து பார்க்கும் சிவாஜி
இந்த படத்தின் வசனத்தை ஆரூர்தாஸ் எழுதி இருப்பார். ஆரூர்தாஸின் வசனம் ஆங்காங்கே கூர்முனை ஈட்டி ஆக பதிந்திருக்கும். பிள்ளை சிவாஜி தன் குடும்பத்தை பார்க்க திருடன் போல் வீட்டிற்குள் நுழைவதும் பின்னர் அவரை குடும்பத்தார் கண்டுவிட தப்பி ஓடும்போது சிவாஜிகணேசன் அப்பா சிவாஜி கணேசன் சுடுவதும் நடக்கும். அதன் பின்னர் கோயிலில் தனது தாயாரை பார்க்க சிவாஜி செல்வார். அந்த காட்சியில் யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்ந்து தாயார் பண்டரிபாய் திரும்பிப் பார்ப்பதும் சிவாஜி கணேசன் அவரை ஆவல்பொங்க பார்ப்பதும் பின்னர் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது வரிசையில் சிவாஜிகணேசன் நின்று பிச்சை வாங்கும்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விளங்காத ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் முக பாவங்களை காட்டும் காட்சி அற்புதமாக இருக்கும்.
உரையாடலில் கலக்கிய ஆரூர் தாஸ்
பண்டரி பாய் தான் பார்த்த அந்த இளைஞன், “அவன பார்க்கும்போது என் அடிவயிறெல்லாம் கலங்குது. அவன் கண்ணை உருட்டி பார்த்தானே அதில் எவ்வளவோ விஷயங்கள் அவன் ஏன் என்னை அப்படி பார்த்தான் அவன் என்னிடம் என்ன எதிர்பார்த்தான். எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்” என்று கூறி யார் அது என தந்தை சிவாஜியிடம் கேட்பார். மகன் உயிருடன் இருப்பது ஓரளவு அப்பா சிவாஜிக்கு புரிய ஆரம்பிக்கும். தந்தை சிவாஜி 25 ஆண்டுகளுக்கு பின் தனது டாக்டர் நண்பரை பார்க்க வருவார் மகன் உயிருடன் இருப்பது எப்படி என்று கேட்கும் பொழுது இருவருக்கும் நடக்கும் வாக்குவாதம் சிறப்பாக இருக்கும். ஒரு கட்டத்தில் தன் மகனுக்காக பிளாங்க் செக் கொடுத்துவிட்டு செல்வார் அப்பா சிவாஜி. அதைப்பார்த்து மகன் சிவாஜி கூறும் வசனம் “என் தலையெழுத்தை அலங்கோலமாக எழுதிய எங்கப்பாவினுடைய கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கு? பார்த்தீர்களா டாக்டர்” என்பார். அதன் பின் தந்தையை பார்க்க அந்த பிளாங்க் செக்குடன் வருவார் மகன் அங்கு இருவருக்கும் நடக்கும் உரையாடலும் சிறப்பாக இருக்கும்.
தந்தை மகன் சந்திக்கும் வசன மோதல்
மகனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிவாஜி அவரை கட்டி அணைத்து அழுவார். “தேவையில்லன்னு நினைச்ச தந்தையும் அவரை தேடி அலையும் மகனும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் அழகான காட்சி” என்பார் மகன் சிவாஜி, அப்பா சிவாஜி தயங்கியவாறே உன் பேர் என்ன என்பார், ” நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பேரை நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை” என்பார் மகன். ஒரு கட்டத்தில் தன் நிலையை நினைத்து ஆற்றாமையுடன், “நீங்களும் என்னை மாதிரித்தானே இருந்தீர்கள், உங்களுக்கும் ஒரு தந்தை இருந்தாரே அவர் உங்களை இப்படித்தான் செய்தாரா? அவர் ஏழை இதயம் இருந்தது, நீங்க பணக்காரர். கல்லாப்பெட்டியும் பணமும் தானே உங்கள் இதயம், இதைவிட என்னை பிறந்தபோதே கொன்றிருக்கலாமே”-ன்னு மகன் கேட்பார், “அய்யோ அதைத்தாண்டா அன்னைக்கு சொன்னேன்” என அப்பா சிவாஜி பதை பதைக்க வாய்த்தவறி சொல்வார்.
சிவாஜியின் சாயல் இல்லாமல் யாரும் நடிக்க முடியாது
கடைசி காட்சியில் தம்பி சிவாஜியை காப்பாற்றுவதற்காக அண்ணன் போராடும்போது குண்டடிப்பட்டு தாயின் மடியில் உயிர் துறப்பார். ஒரே ஒரு தடவை என்னை மகனே என்று கூப்பிடுங்கள் சொல்லி நான் தாய் மடியில் உயிர் விடுவார். இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பு மூன்று பாத்திரங்களும் முழுவதுமாக நடிக்கும். தமிழில் இந்த படம் பெரிதாக பேசப்பட்டது. அந்நிய நாட்டு மொழி படங்கள் வரிசையில் ஆஸ்கருக்காக இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. சிவாஜி கணேசன் பல வருடங்கள், படங்கள் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசனுடைய நடிப்பின் சாயல் இல்லாமல் எந்த நடிகரும் நடிக்க முடியாது என்கிற நிலை தான் நிதர்சனமான உண்மை.
ஒவ்வொரு முறையும் புதிதாக தோன்றும் சிவாஜியின் பரிணாமம்
அவர் பாத்திரங்களில் வெளிப்படுத்திய உணர்ச்சிகர முக பாவங்களை , உடல் மொழியை ஒவ்வொரு தடவையும் பார்க்கும் பொழுது புது புது விதமாக நாம் உணரலாம். ஒரு புத்தகத்தை மீண்டும், மீண்டும் படிக்கும் போது அதன் கருத்துக்கள் ஒவ்வொரு தடவையும் புதியதாக தோன்றுவது போல் சிவாஜி கணேசனுடைய நடிப்பை நாம் திரும்பத் திரும்ப பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஃபிரேமிலும் அவருடைய நடிப்பு நமக்கு புதுமையாக தான் தெரிகின்றன அதனால் தான் அவர் இன்றும் நடிப்புக்காக பேசப்படுகிறார்.