புதுடில்லி, வங்கதேச சுதந்திரத்திற்காக, 1971ல் நடந்த போரில் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நேரடி சந்ததியினருக்கு, முஜிப் விருதை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று வழங்குகிறார்.கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு பாகிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரில், கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா களம் இறங்கியது. நம் ராணுவத்தின் துணையுடன் அந்த போரில் வெற்றி பெற்ற கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற தனி நாடாக உருவெடுத்தது. இந்த போரில், 1,984 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.வங்கதேசம் உருவாக உறுதுணையாக இருந்து உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் படுகாயம் அடைந்த வீரர்களின் நேரடி சந்ததியினருக்கு, வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயரில் விருது வழங்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்தார்.அரசுமுறை பயணமாக புதுடில்லி வந்துள்ள ஷேக் ஹசீனா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்திய ராணுத்தைச் சேர்ந்த 200 வீரர்களின் நேரடி சந்ததியினருக்கு, டில்லியில் இன்று நடக்கும் விழாவில் முஜிப் விருது வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:இந்தியா – வங்கதேசம் இடையே பரஸ்பர நம்பிக்கையைத் தகர்த்து, அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத சக்திகளை இரு நாடுகளும் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும். நீர் பங்கீடு விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.வங்கதேசத்துடன் ஒருங்கிணைந்த பொருளாதார நட்புறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக விரைவில் பேச்சு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்தியா – வங்கதேசம் இடையே நேற்று இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வங்கதேச ரயில்வே ஊழியர்களுக்கு இந்திய ரயில்வே துறை சார்பில் பயிற்சி அளிப்பது, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான தகவல் தொழில்நுட்ப வசதியை வழங்குவது ஆகியஒப்பந்தங்களில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement