ஈழத் தமிழர்களின் வரலாற்று திருப்பங்கள் – தமிழக சினிமாவினால் முடியாத காரியம்




Courtesy: ஜெரா

காத்தவராயன் கூத்தினை நடிகர்கள் ஆடிக்கொண்டிருக்கையில், மெய்மறந்தாவது ஒரு வசனத்தை – ஆட்டமுறையில் பிழைவிட்டால் போதும், உடனடியாகவே பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கண்டனக் குரல்கள் எழும்.

“பிழையா ஆடுறான்… பிழையா பாடுறான்” எனப் பார்ப்பவர்கள் உடனடியாகவே சுட்டிக்காட்டிவிடுவர். அந்தளவிற்குக் ஈழத்துக் கூத்துப் பார்வையாளர்கள், கூத்து தொடர்பான அறிவில் மேம்பட்டவர்கள். நன்கு பரிச்சயமானவர்கள். அறிவோடு ஆழப் பழக்கப்பட்டவர்கள். 

அதேபோலவேதான், ஈழத்தமிழர்க்கு ஈழ ஆயுதப் போராட்டமும். அதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய “இயக்கத்தின்” வரலாற்றிலும், “தலைவர்” என நினைவில் கல்வெட்டாகி நிற்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் வரலாற்றிலும், அவரோடு இணைந்த சம்பவங்களிலும் ஈழத்தமிழர் அனைவருமே அத்துப்படி. படித்தவர் தொட்டு பாமரர் வரைக்கும் இது ஒரு பொது நியதி.

அது முழுமனதும் விரும்பிச் சிரமேற்தாங்கும் விதி. இதற்குக் காரணமாக, மிக அண்மித்த காலத்தில் வாழ்ந்தவர்கள், இனத்திற்காகத் தியாகித்தவர்கள், தமிழர்களோடு இரண்டறமானவர்கள், தம் சாவினை இனவுணர்விற்கு உரமாக்கியவர்கள், கொள்கைக்காக உடல், பொருள், ஆவி, பற்று, பாசம் ஆகிய அனைத்தையும் விட்டுக்கொடுத்தவர்கள், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னுதாரணமாய் ஆனவர்கள் எனப் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். 

எனவே அந்த நியதியை வரலாறுக்குகிறோம், கலைப் படைப்பாக்குகிறோம் என்ற பெயரில் ஏதாவது தவறுசெய்தால், அத்தவறு உடனடியாகவே அப்பட்டமாகிவிடுகிறது. கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறது. கண்டனத்திற்குள்ளாகிறது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி சித்தரிப்பு

ஈழத் தமிழர்களின் வரலாற்று திருப்பங்கள் - தமிழக சினிமாவினால் முடியாத காரியம் | It Is Impossible For Tamil Cinema

அந்தவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப் பின் அவர்கள் குறித்த பல்வேறு ஆதரவு – எதிர் நூல்கள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

அவை வெளிவரும்போது புலிகளைப் பற்றிச் சரியாகச் சொல்லப்பட்டிருந்தால் வரவேற்பையும், தவறாகச் சித்திரிக்கப்பட்டிருந்தால் எதிர்ப்பையும் ஈழத் தமிழரர்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். “இனம்”, “மெட்ராஸ் கபே” போன்ற திரைப்படங்கள் எதிர்கொண்ட எதிர்வினைகள் நினைவிருக்கலாம். 

இப்போது மீளவும் அதேமாதிரியானதொரு எதிர்வினையை “மேதகு 2” என்கிற திரைப்படம் சந்தித்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் மேதகு பாகம் ஒன்று கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது.

சினிமாவுக்கான இணையதளங்களில் வெளியாகிய வேகத்தில் உலகத்தமிழரிடையே அமோக வரவேற்பையும் பெற்றிருந்தது.

தமிழ் ரசனைச் சூழலுக்கு இயைந்த வகையில் உருவாக்கப்பட்ட திரைக்கதை இந்த ஈர்ப்புக்குக் காரணமாகவுமிருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் மேதகு பாகம் இரண்டு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

புலிகள் பயங்கரவாதிகளா? விடுதலைப் போராளிகளா? பஞ்சம் தீர்க்க போன இடத்தில் நாடு கேட்டுப் போராடலாமா என்கிற கேள்விகளுக்குப் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களின் ஊடாகப் பதில் தேடும் முயற்சியாக பாகம் இரண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த முயற்சியானது செம்மைப்படுத்தப்படாத திரைக்கதையமைப்பினால் தோல்வியில் முடிந்திருக்கிறது.

 கதாபாத்திரத் தேர்வு, உரையாடல் மொழி, தாக்கமற்ற காட்சியமைப்பு, சொல்லப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களில் தெளிவின்மை, தொடர்ச்சியின்மை எனப் பல்வேறு குறைபாடுகள் படம் முழுவதும் காணப்படுவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மாதிரியான ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும்போது பல்வேறு சிக்கல் எழும். உலகின் அனேகமான நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றி திரைப்படம் எடுத்துத் திரையரங்குகளில் வெளியிடமுடியாது.

எனவே இணையவெளியில் பார்க்க வசதியற்ற சினிமா பார்வையாளர்களின் கொண்டுபோக முடியாது. இது மேதகு படத்திற்கு இருந்த முதற்சவால் ஆகும். ஆனால் கொரோனாவுக்குப் பின்னர் துரித வளர்ச்சி கண்ட சினிமாவுக்கான இணையதளங்கள் இந்தச் சவாலைத் மொத்தமாகவே தின்று தீர்த்துவிட்டது.

நல்ல கதையொன்றால் கொண்டுவா பணம் தருகிறேன் என்கின்றன சினிமாவுக்கான இணையதளங்கள். அந்த விதத்தில்தான் உலகம் முழுவதும் மேதகு சென்றுசேர்ந்தது. 

இந்த வாய்ப்பை மேதகு சரியாகப் பயன்படுத்தியதா?. ஆம் மேதகு பகுதி ஒன்று அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது.

முதல்படம் என்பதாலும், அதீத எதிர்பார்ப்பு இருந்தமையினாலும், பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்கள் என்பதனாலும் கடும் சிரத்தையுடன் படத்தை உருவாக்கியிருந்தார்கள். பார்வையாளர்களும் அதற்கு அமோக வரவேற்பளித்தனர். 

மேதகு – பாகம் 2! ஈழத்தமிழர் வரலாற்றைப் புரட்டிப் போட்ட சம்பவங்கள் 

ஈழத் தமிழர்களின் வரலாற்று திருப்பங்கள் - தமிழக சினிமாவினால் முடியாத காரியம் | It Is Impossible For Tamil Cinema

அதே உற்சாகத்துடன்தான் பாகம் இரண்டையும் பார்வையாளர்கள் நெருங்கினார்கள். காரணம், அதற்கூடாகத்தான், ஈழத்தமிழர் விடுதலை வரலாற்றையே மாற்றிப்போட்ட பல சம்பவங்கள் சொல்லப்படவேண்டியிருந்தன.

ஏனெனில் 1970 ஆண்டுகளுக்குப் பின்னரான ஈழத்தமிழர் வரலாற்றையும், விடுதலைப் புலிகளையும் நூலளவிற்குக் கூடப் பிரித்துப் பார்க்கவியலாது. தீரமிகு விடுதலைப் புலிகளின் வரலாற்றின் வழியே, அதன் போராளிகளின் வாழ்க்கை வழியே தம் கடந்த காலத்தைத் திரையில் கொண்டுவரப்போகிறார்கள் என்றே ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மேற்சொன்ன குறைபாடுகளின் காரணமாக அத்தனை எதிர்பார்ப்புக்களும் பொய்த்தன. 

படத்தின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான காரணங்களை 1948 ஆம் ஆண்டிலிருந்து தேடவேண்டும். 1948 தொடக்கம் 1967 வரையான காலப்பகுதியில் ஈழத்தமிழருக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்ட வன்முறைகளே ஆயுதப் போராட்ட உருவாக்கத்திற்குப் பிரதான காரணம்.

அந்தக் காலப்பகுதியின் வரலாற்றை ஒரு சில திரை ஏடுகளில் கடந்துபோக முடியாது. பல்லாயிரம் வரலாற்றுத் திரைப்படங்களாக வரவேண்டிய துன்பச் சம்பவங்கள் பல அந்தக் காலப்பகுதியில்தான் நிகழ்ந்தேறின. எனவே அந்தக் காலப் பகுதி தொடர்பில் சரியான தெளிவற்ற – தேடலற்ற இயக்குநர் ஒருவரினால் விடுதலைப் புலிகளின் வரலாற்றைத் தெளிவாகக் கொண்டுவரமுடியாது. 

சிறந்த சினிமாவுக்கு வாய்ப்பினை வழங்குவதில்லை

ஈழத் தமிழர்களின் வரலாற்று திருப்பங்கள் - தமிழக சினிமாவினால் முடியாத காரியம் | It Is Impossible For Tamil Cinema

தமிழக திரைக்கவர்ச்சியும், ரசனையும் உலகத் தமிழர்கள் அனைவரையுமே கட்டிவைத்திருக்கிறது. தமிழக சினிமா சூழலின் வியாபார மேலாதிக்கம், சென்னையைத் தாண்டி வேறொரு இடத்திலிருந்து நல்ல சினிமா வருவதற்கான வாய்ப்பை வழங்குவதில்லை.

விடுதலைப்புலிகள் இதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். அவர்களின் தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, நிதர்சனம் போன்ற அமைப்புகள் இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் அடைந்திருந்தன.

ஈழத்துச் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் எனக் கட்டமைக்கப்பட்டிருந்த சினிமா ரசனையை இன விடுதலையுணர்வுக்குள் இழுத்து வரும் அளவிற்குத் திரைப்படங்களை உருவாக்கின. 

அதற்குப் பிறகு ஈழத் தமிழர்கள் சினிமா என்றால் அது தமிழகத்திலிருந்தே வரவேண்டும் என்கிற கற்பிதத்திற்குள் சென்றுவிட்டனர். தமிழகம் சினிமா துறையில் கண்டிருக்கும் அபரீதமான வளர்ச்சியும், பிரம்மாண்டமும் இதற்குப் பிரதான காரணம். அந்தத் தொழில் நுட்பங்களின் மொத்த வளர்ச்சியையும் கொண்டு எடுக்கப்பட்ட மேதகு 2 தான் தோற்றிருக்கிறது. 

அப்படியாயின் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? கதைச் சூழலை தமிழக சினிமா உலகம் சரியாக விளங்கிக்கொள்ள முடியாமைதான். தமிழக சினிமா உலகம் கட்டமைத்து வைத்திருக்கும் வியாபாரத் தந்திரமிக்க கதாநாயகத்தனம் என்பது சினிமா கவர்ச்சிக்கானது மட்டுமானதே ஆகும்.

தோல்வி கண்ட மேதகு

ஈழத் தமிழர்களின் வரலாற்று திருப்பங்கள் - தமிழக சினிமாவினால் முடியாத காரியம் | It Is Impossible For Tamil Cinema

எனவே என்னதான் கேட்க மெய்சிலிர்க்கும் நிஜமாந்தர்களின் கதையை அதனிடம் கொடுத்தாலும், அது தான் கற்றுவைத்திருக்கிற விதத்தில் மாற்றியே திரைப்படமாக வெளிவிடும். ஏனெனில் தமிழக சினிமா என்பது ஒரு தொழிற்சாலை. ஒரு மசாலாக் கூடம். உலகையே அசைக்கும் கதைகளை அதனிடம் கொடுத்தாலும், அது தனக்குரிய மெருகுடனேயே எடுத்துக்கொள்ளும். 

உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவரது வாழ்வின் ஒவ்வொரு மணிநேர வாழ்க்கையும் ஒரு வரலாற்றுப் படங்களை உருவாக்குவதற்கான சம்பவங்களைக் கொண்டது.

ஏனெனில் சாத்தியமேயற்றது என கைவிடப்பட்ட ஒரு விடயத்தை ஒருவர் தன் சிரமேற்கொண்டு நடந்தாரெனில் அவர்கடந்த நேரங்களின் வலி பெரிது. அந்த நேரத்தின் ஒரு நிமிடத்தைத்தானும் தவறவிட்டு, அந்நாளில் அவர் வாழ்ந்த வாழ்வின் தொடர்ச்சியைத் திரையில் காட்டுவது சாத்தியமற்றது. மேதகு பாகம் இரண்டு இதனைச் செய்ய முயன்றே தோற்றிருக்கிறது. 

பிரபாரகரன் அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற ஏதாவது ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதனை மட்டும் வரலாற்றுத் திரைப்படமாக்கியிருந்தால் அதில் வெற்றியடைந்திருக்க முடியும். ஆடிக் கலவரம் என சொல்லப்படும் கறுப்பு ஜீலை ஈழத்தமிழர் வரலாற்றில் நினைவு வைக்கப்படும் மிகக்கோரமான சம்பவம்.

பல்லாயிரம் தமிழர்களின் வாழ்க்கையை அழித்துப்போட்டச் சரித்திரம். அந்த நாட்களின் துயரத்தை எந்தச் சினிமாவினாலும் ஒரு காட்சியில் கடந்துபோகவியலாது. மேதகு 2 அதனைச் செய்தது. தோற்றுப்போனது. 

இப்படியாக சரியான தேடலும், புரிதலுமற்று எடுக்கப்படும் திரைப்படங்கள்தான் இனிவரும் காலங்களில் வரலாறாகப் போகின்றன. எதிர்காலத் தலைமுறை அதிலிருந்தான் பாடம் கற்றுக்கொள்ளும். அப்படி பாடங்கற்கும் ஒரு குழந்தை மேதகு 2 திரைப்படத்தைக் காண நேர்ந்தால், பிரபாகரன் ஒரு பயங்கரவாதி என்கிற முடிவுக்கே வரும்.

ஏனெனில் இத்திரைப்படத்தில் பிரபாகரன் அவர்களால் செய்யப்பட்டதாகக் காட்டப்படும் முக்கொலைகளும், ஆயுதங்கள் எதுவுமற்ற நிராயுதபாணிகளைச் சுட்டுப்படுகொலை செய்வதாகவே காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதற்கு எவ்வித வலுவான காரணங்களும் வரலாற்றடிப்படையில் முன்வைக்கப்படவில்லை. 

தமிழக சினிமா இயக்குநர் ராம் அவர்கள் ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார். “ஈழத்தமிழர்களின் வாழ்வியலை ஈழத்தமிழர்கள் எடுத்தால்தான் அது சரியான முழுமைபெறும். வேறு எந்தத் தேசத்தை சேர்ந்தவராலும் அதனைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது” என்பார்.

அதுதான் உண்மையும்கூட. கற்பனைகளுக்கு அப்பாலான இரத்தம் சதையுமான ஈழத்தமிழரின் வாழ்வியலை இனவுணர்வை மாத்திரம் வைத்து கற்றுக்கொள்ள முடியாது. நூல்களை மாத்திரம் வாசித்துக் கற்றுக்கொள்ள முடியாது.

அதுவொரு வாழ்தல் முறை. வாழ்வியக்க முறை. அதற்குள் இயங்கினால் மாத்திரமே அதனைக் கற்றுக்கொள்ளவியலும். அப்படி கற்றுக்கொண்டு அதனைத் திரைப்படமாக்கும்போதே அது திரையில் வெற்றிவெறும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.