மும்பை: பாஜகவுக்கு துரோகம் இழைத்த உத்தவ் தாக்கரேவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற பாஜக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று பேசினார். அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிப்பதாவது.
பாஜகவுக்கு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே துரோகம் இழைத்து விட்டார். அவருக்கு தகுந்த பாடம் புகட்டியாக வேண்டும். அரசியலில் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், நம்பிக்கை துரோகத்தை மட்டும் ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது.
அடுத்தடுத்து மேற்கொண்ட தன்னிச்சையான நடவடிக்கைகள் தான் சிவ சேனா கட்சியின் பிளவுக்கு முக்கிய காரணம். எனவே, அதற்கான முழு பொறுப்பையும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேதான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். உத்தவ் தாக்கரேவின் பேராசை தான் அவரது கட்சியின் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராக திரும்பியதற்கான முக்கிய காரணம். இதனால்தான், தாக்கரே தலைமையிலான மகா விகாஷ் அகாடி அரசு கவிழ்ந்தது. அதில், பாஜகவின் பங்கு எதுவுமில்லை.
உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு மட்டும் துரோகம் இழைத்தது மட்டுமில்லாமல் சித்தாந்தத்திற்கும் துரோகம் செய்துள்ளார். அவரை நம்பி வாக்களித்த மகாராஷ்டிர மக்களையும் அவர் அவமதிப்பு செய்துள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் பதவி தருவதாக நாங்கள் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை. நாங்கள் மூடிய அறைகளுக்குள் அரசியல் செய்பவர்கள் அல்ல. வெளிப்படையான அரசியல் செயல்பாட்டை கொண்டவர்கள் என்று அமித் ஷா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விநாயகர் பந்தல் நிகழ்ச்சியில்
இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்று நடைபெற்ற லால்பாக்ஷா ராஜ விநாயகர் பந்தல் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் பங்கேற்றார்.
மும்பை பாஜக தலைவர் ஆசிஷ் ஷெல்லர், அக்கட்சியின் தேசிய பொது செயலர் வினோத் தவ்டே ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.