கர்நாடகா பெல்லாரி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சுரேஷ். இவர், தன்னுடைய சிர்வாரா கிராமத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி சிறுவனின் உயிர் பறிபோயுள்ளது.
சிறுவனின் சடலத்தை மீட்டுக் கொண்டு வரும் போது, சடலத்தை உப்புக் குவியலில் வைத்தால் சிறுவன் உயிர்பெற்றுத் திரும்பி வருவான் என்று ஒருவர் கூறியுள்ளார். மகனை இழந்த சோகத்தில் இருந்த குடும்பத்தினர், இதைச் செய்து பார்த்தால் தன்னுடைய மகன் திரும்ப உயிர் பெற்று விடுவானோ என நம்பியுள்ளனர்.
உடனே ஓர் உப்புக் குவியலை ஏற்படுத்தி சிறுவனின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துள்ளனர். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என நேரம் கடந்ததே தவிர, மகன் உயிர்த்தெழுந்த பாடில்லை. சுமார் நான்கு மணிநேர காத்திருப்புக்குப் பின்பு, சிறுவனின் சடலத்தைத் தகனம் செய்தனர்.
மகன் பிழைத்துவிடுவான் என்ற ஆதங்கத்தில் குடும்பத்தினர் இதைச் செய்திருந்தாலும், அவநம்பிக்கைகளும், மூடப்பழக்கங்களும் இதில் வெளிப்படுவதை நம்மால் காணமுடிகிறது.
சமூக வலைத்தளத்தில், இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அச்சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
ஆற்றாமையின் வலியிலும், மூடநம்பிக்கைகள் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது…