கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மாநகரமானது நாட்டின் ஐடி தலைநகராக விளங்குகிறது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரை மூன்றாம் நிலை நகரங்களை விட மிக மோசமாக காணப்படுகிறது. அதற்கு உதாரணமாக சமீபத்திய மழை, வெள்ளப் பாதிப்புகளை கூறலாம். வழக்கமாக பெய்யும் பலத்த மழைக்கே தத்தளிக்கும் பெங்களூரு, 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்தால் சொல்லவே தேவையில்லை.
தற்போது மாநகர் முழுவதும் மழைநீர் கடல் போல் தேங்கி நிற்கிறது. படகுகள், டிராக்டர்கள் மூலம் மக்கள் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏமலூர், ரெயின்போ ட்ரைவ் லேஅவுட், சன்னி ப்ரூக்ஸ் லேஅவுட், மாரத்தஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை காண முடிகிறது.
என்ன காரணம்?
பெங்களூரு மாநகரில் உள்ள மழைநீர் வடிகால்கள் மிக மிக பழமையானவை. இவற்றை முற்றிலுமாக உடைத்து விட்டு பெரிதுபடுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. ஆனால் அதற்கான போதிய இடவசதி இன்றி காணப்படுகிறது. எனவே மழைநீர் வடிகால்கள் அமைக்க சரியான இடத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அங்கு அகலமான பாதையுடன் கூடிய வடிகால்களை அமைக்க வேண்டும்.
தற்போதுள்ள வடிகால்கள் 5 முதல் 10 செ.மீ வரையிலான மழையை மட்டுமே தாங்கக் கூடியவை. ஆனால் நேற்று மட்டும் 13 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. சில இடங்களில் 18 செ.மீ வரை மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் சரியாக பயன்படுத்தப்படாமல் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றி வைத்துள்ளனர்.
இந்த விஷயத்தில் உள்ளூர் மக்களின் அலட்சியமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் முறைகேடான கட்டுமானங்களும் நீர்வழிப் பாதையை தடுத்துவிட்டன. குளங்கள், ஏரிகள் இருந்த பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளும், வர்த்தக கட்டிடங்களுமாக உயர்ந்து நிற்கின்றன. எனவே சாக்கடை நீரும், மழைநீரும் ஒன்று சேர்ந்து கொண்டு சாலைகளில் தான் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
என்ன செய்யலாம்?
கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தால் அவர்களும் சரியான நேரத்தில் வந்து சரிசெய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மழைக்கு முன்பாக செய்ய வேண்டிய மராமத்து பணிகள் எதையும் செய்யாமல் மெத்தனப் போக்கில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இனிமேலாவது கர்நாடக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். வரலாறு காணாத துயரம் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தற்போது மழை வந்த பிறகு முதல்வர் பசவராஜ் பொம்மை முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை களத்தில் இறங்கி உத்தரவுகள் பிறப்பித்தும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எடுத்து என்ன பயன்? ஏற்பட்ட இழப்புகளை, பொருளாதார நஷ்டத்தை ஈடு செய்ய முடியாதே? சிறந்த பொறியாளர்களை கொண்டு நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய வகையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலை மேலாண்மை திட்டங்களை கர்நாடக அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.