சேலம் : சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் மலை அடிவாரப் பகுதியில் பெய்த கனமழையால் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பிரபல சுற்றுலாத் தளமான ஏற்காடு மற்றும் மலை அடிவாரப் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் பள்ளப்பட்டி ஏரிக்கு செல்லும் தண்ணீர் பெருக்கெடுத்தது. ஓடையின் நீர்த்தளங்கள் அக்கிரமிக்கப்பட்டதால் வெள்ள நீர் சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 16 வார்டுக்குள் புகுந்தது. கோவிந்த கவுண்டர் தோட்டம், தோப்புக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள 300க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் விடிய விடிய உறக்கமின்றி செய்வதறியாது தவித்தனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் ஓடையில் அடைக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்றினர். குடியிருப்பு பகுதியில் தேங்கி இருந்த வெள்ள நீரையும் அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மலை பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவை அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்று ஆய்வு நடத்தினார்.