திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஓணம் திருநாளில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து தயாராகி வருகின்றனர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு பம்பையில் உடனடி முன்பதிவு செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், சபரிமலையில் திருவோண பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. வேறு பூஜைகள் நடைபெறாமல் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர், வழக்கான பூஜைகளும், நெய் அபிஷேகமும் நடைபெறும். நாளை மறுநாள் திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
எல்லா நாட்களிலும், உதய அஸ்தமன பூஜையும், படி பூஜையும் நடைபெறும். நாளை முதல் 10ம் தேதி வரை தினமும் மதியம் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும். 10ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. நாளை முதல் 10ம் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தகவல் மக்கள் தொடர்பு துறை அதிகாரி சுனில் தெரிவித்துள்ளார். இதேபோல் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன.