மதுரை: ஓணம் பண்டிகை, தொடர் முகூர்த்தம், தென் மாவட்டங்களில் நீடிக்கும் மழையால் மதுரை மல்லிகைப்பூ கடந்த ஒரு வாரமாக விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று உச்சமாக கிலோ ரூ.3000க்கு விற்பனையானது.
தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு மல்லிகைப்பூ உற்பத்தியாகிறது. தற்போது மழையால் மொட்டுகள் உதிர்ந்தும், செடிகள் அழிந்தும் வருவதால் மல்லிகைப்பூ வரத்து சந்தைகளுக்கு குறைந்தது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு தற்போது சராசரியாக 1 டன் முதல் 1 1/2 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
இதுபோலவே திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தைக்கு மல்லிகைப்பூ வரத்து குறைந்தது. அதனால் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று கிலோ ரூ.3000க்கு மல்லிகைப்பூ விற்பனையானது. கடந்த ஒருவாரமாக மல்லிகைப்பூ விலை உயர்ந்ததால் பெண்கள் மல்லிகைப்பூ வாங்கி தலையில் சூட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தொடர் முகூர்த்தம், ஓணம் பண்டிகை ஒரு புறம் இருந்தாலும் மழையால் பூக்கள் உற்பத்தி குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி ராமச்சந்திரன் கூறுகையில், ”அடுத்தடுத்த நாட்கள் முகூரத்த நாட்கள் வருகிறது. மேலும், தென் தமிழகத்தில் நீடிக்கும் மழையால் மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது. அதனால், மல்லிகைப்பூ அதிகமாக விலை உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ ரூ 300 முதல் ரூ.600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ரூ.1500 முதல் ரூ.1800 ரூபாய் வரை விலை உயர்ந்தது. ரூ.50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்பங்கி பூவும் ரூ.250 முதல் ரூ.300க்கு விற்பனையானது. அதுபோல், பிச்சிப்பூ ரூ.1000, முல்லைப்பூ ரூ.1500க்கு விற்பனையானது. 50 ரூபாய்க்கு விற்கும் பட்டன் ரோஸ் ரூ.250க்கு விற்பனையாகிறது,” என்றார்.