அகமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. குஜராத்தின் அகமதாபாத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது.
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும். மாநிலத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 3,000 ஆங்கில வழி பள்ளிகள் தொடங்கப்படும். மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படும்.
ஆளும் பாஜக அரசு, சர்தார் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை உருவாக்கி உள்ளது. ஆனால் அவரது கொள்கைகளுக்கு விரோதமாக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் பெரும் தொழிலதிபர்களின் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். அவர்கள் ஒருபோதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.