கண்ணூர்: கிறிஸ்தவப் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் ‘லவ் ஜிகாத்’ அதிக அளவில் நடைபெற்று வருவதாக கத்தோலிக்க பேராயர் பகிரங்கமாக குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து, கிறிஸ்தவர்கள் போன்ற இஸ்லாம் அல்லாத மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு காதல் வலையில் சிக்க வைத்து மதம் மாற்றுவதாக கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் புகார்களும், குற்றச்சாட்டுகளும் குவிந்தன. இதற்கு ‘லவ் ஜிகாத்’ எனப் பெயரிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ‘லவ் ஜிகாத்’ புகார்கள் எழுந்தன. பல இளம்பெண்களின் பெற்றோர்கள் காவல் நிலையங்களில் இதுதொடர்பான புகார்களை அளித்ததால் பதற்றமான சூழல் எழுந்தது.
சட்டம் இயற்றி உ.பி. அரசு
அந்த வகையில், உத்தரபிரதேசத்தில்தான் இதுபோன்ற ‘லவ் ஜிகாத்’ அதிக அளவில் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, லவ் ஜிகாத்தில் ஈடுபடும் முஸ்லிம் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த 2020-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்க முடியும்.
இதையடுத்து, லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக கூறி இந்த சட்டப்பிரிவின் கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வந்த போதிலும், இந்த நடவடிக்கையை உ.பி. அரசு கைவிடவில்லை.
கேரளாவில் லவ் ஜிகாத்
இந்த சூழலில், கேரளாவிலும் இதுபோன்ற ‘லவ் ஜிகாத்’ நடைபெறுவதாக புகார் எழுந்தது. அங்கு இந்து பெண்களை காட்டிலும் கிறிஸ்தவப் பெண்களே அதிக அளவில் லவ் ஜிகாத்தின் கீழ் குறிவைக்கப்படுவதாக கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன. இதன் உச்சக்கட்டமாக, கடந்த ஆண்டு லவ் ஜிகாத்தில் இரையானதாக கூறப்படும் நிமிஷா, சோனா செபாஸ்டியன் ஆகிய இரு பெண்கள் இஸ்லாத்துக்கு மதம் மாறியதுடன், ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதப் படையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் லவ் ஜிகாத் விவகாரம் பெரும் பூதாகரமானது.
அரசுக்கு பகிரங்க புகார்
இந்த சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலா தேவாலய பேராயர் ஜோசப் கல்லரன்கட், கேரள அரசுக்கு லவ் ஜிகாத் தொடர்பாக வெளிப்படையாக கடிதம் எழுதினார். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக பலர் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் வெடித்த ‘லவ் ஜிகாத்’ சர்ச்சை
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தெல்லிச்சேரி கத்தோலிக்க டயோசீசனின் பேராயர் மார் ஜோசப், தனது மறை மாவட்டத்துக்கு உட்பட்ட இளம்பெண்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கத்தோலிக்க கிறிஸ்தவப் பெண்களை தீவிரவாதிகள் காதல் என்ற போர்வையில் ஏமாற்றி மதம் மாற்றும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. எனவே தீவிரவாதிகளின் இந்த சதிச்செயலுக்கு இனியும் கிறிஸ்தவ இளம்பெண்கள் இரையாகக் கூடாது. இதற்காக நமது தேவாலயங்களில் விழிப்புணர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இளம்பெண்களும், அவர்களின் பெற்றோரும் கலந்துகொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
‘லவ் ஜிகாத்’ விவகாரம் கேரளாவில் சற்று ஓய்ந்திருந்த நிலையில், பேராயரின் இந்தக் கடிதம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.