சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்

டெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சிலருக்கு டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

மேற்கண்ட வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே மேற்கண்ட சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்தது. மேலும், இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் எனக்கோரி இன்று செந்தில்பாலாஜி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.