ராஜபாளையத்தில் சமையல் சிலிண்டரை திறந்து அக்கம் பக்கத்தினரை ஓடவிட்ட இளைஞர், பக்கத்து வீட்டுக்குள் புகுந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சம்பந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 38). இவர் கடந்த 3 மாதங்களாக மனச்சிதைவு நோய்க்கு சேத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து அவர் ராஜபாளையம், தெற்கு மலையடிப்பட்டியில் உள்ள அவருடைய அக்காள் முத்துமாரியின் வீட்டுக்கு நேற்று மாலை சென்றுள்ளார். வெகுநாள்கள் மருத்துவமனை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்த அவர், வீட்டிலும் மனவருத்தத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்துடன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கதவு ஜன்னல்களை அடைத்துவிட்டு கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டுள்ளார். முத்துமாரியின் வீட்டிலிருந்து சமையல் காஸ் ‘லீக்’காகும் நாற்றம் தெரிந்து அக்கம் பக்கத்தினர், ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வீட்டிலிருந்த சுவிட்ச் ஃபோர்டில் மின்சுவிட்சை ஆன் செய்து கோபாலகிருஷ்ணன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் முத்துமாரியின் வீட்டிலிருந்து புகை மண்டலம் கிளம்பவும் பதறிப்போன பக்கத்து வீட்டுக்காரர்களான ராமசுப்பு(32), கருப்பசாமி(29) ஆகிய இருவரும் கதவை உடைத்து உள்ளேச்சென்றனர். இதில், கோபாலகிருஷ்ணன் உட்பட மூன்று பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடலில் ஏற்பட்ட தீக்காயத்தின் வலி தாங்க முடியாமல், மூவரும் வெளியே ஓடிவரவும், ராமசுப்புவையும், கருப்பசாமியையும் அவர்களது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சமையல் காஸ் லீக்கான பயத்தில் மற்றவர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்த பரபரப்பில் அங்கிருந்து மாயமான கோபாலகிருஷ்ணன், அவர் அக்காள் வீட்டுக்கு, பக்கத்து வீட்டுக்காரரான பிரியாவின் வீட்டுக்குள் புகுந்து படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்” எனக் கூறினர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து ராமசுப்பு அளித்த புகாரின்பேரில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.