பெங்ஜிங்: சீனாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இது போன்ற இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கங்டிங் என்ற நகரத்தில் மையாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த நகரமே குலுங்கியது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கங்டிங் நகரம் சில வினாடிகள் ஸ்தம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். வீடுகள் அதிர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பின் அதிர்வுகளால் அங்குள்ள ஊரக பகுதிகள் பலவற்றில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்களும் சேதம் அடைந்தன.
மக்கள் அச்சம்
நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகளும் ஏற்பட்டதால் மக்களின் அச்சம் அதிகரித்தது. நிலநடுக்கத்தால் பல இடங்களில் மலைச்சரிவு ஏற்பட்டதாகவும், பல இடங்களில் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது போன்ற இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
46 பேர் பலி
தொடர்ந்து தற்போது நாட்டில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களும் காயத்துடனும், பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். இதில் தற்போது வரை நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுடன் டிரக்குகள் நெடுஞ்சாலைகளில் அணிவகுத்து செல்லும் காட்சிகள் அந்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
கடுமையான நிலநடுக்கத்தை உணர்ந்தேன்
மாகாண தலைநகரிலும் செங்டு நகரிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டு இருந்தன. செங்டு நகரில் ஏற்கனவே கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள சூழலில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களுக்கு மேலும் அச்சத்தை அதிகரித்தது. செங்டு நகரவாசி ஒருவர் இது குறித்து கூறுகையில், ”கடுமையான நிலநடுக்கத்தை நான் உணர்ந்தேன். எனது அண்டை வீட்டார்களும் அதிர்வுகளை உணர்ந்தனர்” என்றார்.
மின் விநியோகம்
செங்டு நகரில் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் குடியிருப்பு கட்டிடங்களை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வீட்டின் முன்பகுதியிலே மக்கள் கூடி நின்றதை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் கர்சே மற்றும் யான் ஆகிய நகரங்களில் உள்ள மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இன்னொரு நகரத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், கிழக்கு திபெத் பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 என்ற அளவுக்கு நில அதிர்வு உணரப்பட்டது.