பீஜிங், தென்மேற்கு சீனாவில், நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 65 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் சிசுவான் மாகாணத்தில், நேற்று முன்தினம், 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு, அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.மலைகள் அதிகம் உள்ள சிசுவானின் லுாடிங் பகுதியில், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பாறைகள் விழுந்ததில், வீடுகள், சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன.தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ள திபெத்தின் மோக்சி நகரில், பாதிப்பு கடுமையாக இருந்தது. அங்கு, 37 பேர் உயிரிழந்து உள்ளனர். நிலநடுக்கத்தால், பல வீடுகள் தங்குவதற்கு பாதுகாப்பற்றவையாக அறிவிக்கப்பட்டன. இதனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் பலியானோர் எண்ணிக்கை, 65 ஆக உயர்ந்துள்ளது. நுாற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.சிசுவான் மாகாணத்தில், ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளன. மேலும், வறட்சி ஏற்பட்டு நீர்நிலைகள் வற்றியுள்ளன. இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சார உற்பத்தியும் கடுமையாக சரிந்து, பல இடங்களில் மின் தடை நீடித்து வருகிறது.இந்நிலையில், நிலநடுக்கமும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement